Friday, October 08, 2010

கார்த்தி அண்ணாவுக்கு அஞ்சலி

காலை எனது தந்தையின் அலைப்பேசி ஒலிக்க, எனது தந்தை பேசிவிட்டு சொன்ன தகவல் மூலையில் சென்று உரைக்க சில நிமிடங்கள் பிடித்தது. மீண்டும் கேட்டு தெளிவுப் படுத்திக் கொண்டேன். அது எனது நண்பர் திரு.கார்த்திகேயன் அவர்கள் அகால மரணமடைந்தார் என்பதே.

அந்த செய்தியை ஜீரணித்துக் கொண்டு, அவரின் இறுதி யாத்திரைக்கு நான் செல்ல இயலா நிலையில் இருந்ததால் தந்தையார் மட்டுமே சென்றார். பின் எனது அம்மா எங்கள் நட்பு பூத்ததைப் பற்றி எனது நண்பர் என்னைவிட, பதின்மூன்று நாட்கள் மூத்தவர்.

நாங்கள் நண்பரின் ஊருக்கு குடி பெயரும்போது, எனக்கு வயது ஐந்து. நண்பரின் எதிர் வீட்டில் தான் குடி இருந்தோம். நாங்கள் முன்பு இருந்த இடம் கர்னாடக எல்லை என்பதால் எனக்கு தமிழ் புரியுமே தவிர பேச வராது. கன்னடம் மட்டுமே.

அதனால் அந்த ஊரில் எனது பெற்றோரைத் தவிர வேறு யாருடனும் எனக்கு பேச இயலாது. மொழி புரியாததால் விளையாட, யாரும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். வெளித் திண்ணையில் அமர்ந்து வேடிக்கை மட்டுமே பார்ப்பேன். அதனால், எனது உலகம் என் பெற்றோர் மற்றும் எங்கள் வீட்டு திண்ணை மட்டுமே.

என்னை பள்ளியிலும் சேர்த்தாகிவிட்டது, நானும், எனது நண்பரும் ஒரே பள்ளி, ஒரே வகுப்பும்கூட. எனது தந்தையாரே , பள்ளிக்கு அழைத்து சென்று, திரும்ப வீட்டிற்கு அழைத்து வருவார். இப்படியே சில நாட்கள் சென்றது. சிற்சில சொற்கள் நானும் தமிழில் பேச கற்றுக் கொண்டேனாம்.

எனது தந்தை அரசு ஊழியர் என்பதால், தினமும் எனக்கு நேரத்தை செலவிட முடியவில்லை. அப்பாவால் முடியவில்லையெனில், தாயுரதன் செல்வேன். ஒருநாள் மாலை, வழக்கம்போல், சிறுவர்கள் விளையாட, நான் திண்ணையில் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும்போது, நண்பர் என்னருகில் வந்து உரையாட ஆரம்பித்தாராம்.

எங்களது மொழிப்பெயர்ப்பாளர் எனது தாயாரே. பின்பு என்ன நினைத்தாரோ, எனது நண்பர், காலை பள்ளிக்கு கிளம்பும்போது, எனது தாயார், கார்த்தி இங்க வா. தங்கச்ஹ்சியை உன்னோடு பள்ளிக்கு அழைத்து சென்று, திரும்ப அழைத்து வருகிறாயா? எனக் கேட்க சரி என்று கூறி அன்றிலிருந்து எனது நாட்கள் அவரது துணையுடன் நர ஆரம்பித்தது.

பின்பு, வந்த காலங்களில், நான் அவரது உதவியை நாட வேண்டிய சூழ்நிலை வரும்போதெல்லாம். நீ என்னைவிட பதின்மூன்று நாட்கள் இளையவள். எனவே அண்ணா என்று கூப்பிடு என வற்புறுத்துவார். ஆனால், பதின் மூன்று நாட்கள்தானே, ஆண்டுகள் ஒன்றுமில்லையே என கூறி, ஒரு நாள் கூட உன்னை அப்படி அழைத்ததில்லை. ஆனால், இன்று மட்டும் ஒராராயிரம் முறை கூறி விட்டேன் அண்ணா, அண்ணா என்று.

பள்ளிக்கு பயில, கம்மாயில் குளிக்க, கோயிலுக்கு, குடிநீர் எடுக்க, விளையாட, ஆற்றில் மீன் பிடிக்க, புளியங்காய் பொறுக்க இப்படி அந்த ஊரில் நம் கால் படாத இடம் எது? எனது பால்ய பருவம் உன்னுடன்தானே கழிந்தது. யாருக்கு யார் நிழல் என ஐயப்பாடுகள் பார்ப்பவர்களுக்கு தோன்றும்படி நாட்களை கழித்தோம் சில வருடங்கள் கழித்து அதே ஊரில் வேறு தெருவில் குடிபெயர்ந்ததாலும், பாலின வேறுபாடுகளினாலும் நமது நட்பு சுருங்கி வெறும் நலவிசாரிப்புகளோடு நின்று போனது.

அழகாய் ஓவியம் வரைவாய் நீ. பத்து ஆண்டுகளுக்கு முன் உன் வீட்டிற்கு வந்தபோது , குழந்தைப் பருவத்தில் நாம் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் போல் உனது கையாலேயே வரைந்து பரிசளித்தாயே. இன்று அதைப்பார்த்து அண்ணா உன்னை எண்ணி கண்ணீர் வடிக்கிறேன்.

சத்தியமாய், சில நாட்களுக்கு முன் இந்த பிளாக் ஆரம்பிக்கும்போது உன் நினைவு வந்தது அண்ணா. நமது திருவிளையாடல்களை பதிவிட வேண்டும் என்று நினைத்தேன் . இனி என்னால், பதிவிட முடியுமா? அப்படியே பதிவிட்டாலும் கண்ணீர் சுரக்காமல் இருக்குமா?

அண்ணா, உன் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன். . அண்ணா, மீண்டும் எனக்கோர் பிறவி உண்டு என்றால், அதில் நாம் ஓர் தாய் வயிற்றில் பிறக்க வேண்டும்.

கண்ணீருடன்.No comments:

Post a Comment