Saturday, October 09, 2010

வாழ்க்கை தேடல்

சில சமயங்களில் எந்த காரணமுமே இருக்காது. ஆனால், ஏதோ ஒரு இனம்புரியாத வண்டு ஒன்று நமது மூளைக்குள் புகுந்து குடைய ஆரம்பிக்கும். பொறுத்து கொள்ளக் கூடிய வலி என்றாலும், நமநமனு மனதுக்குள் ஒருவண்டு பிராண்டுவதை உணர்ந்திருக்கிறேன். ஏன் பிறந்தோம்? ஏன் வளர்ந்தோம்? என்ன சாதித்தோம்? என்ற கேள்வி என்னை ஈட்டிப் போல் பிளந்ததுண்டு. என்னுள் அலைப்பாயும் இந்தக் கேள்விக்கு எப்படி என்னால் விடை காண்பது? என புரியாமல் விழித்ததுண்டு.

இந்த பிராண்டலுக்கு விடை காண விழைந்தபோது என்னையே எதிர் கேள்வி கேட்டு, என் பதிலிலேயே வாயடைக்கப்பட்டு, ஏளனப்பட்டு...., பூட்டிய இருட்டறையில் மாட்டிக்கொண்ட எலியைப்போல் மீண்டும் அகப்பட்டுக் கொள்வேன். விடை கிடைக்காமல் என் கேள்வி நீறு பூத்த நெருப்பாக சில காலம் தீவிரம் குறைந்து அடங்கிவிடும். மீண்டும் யாராலோ விசிறப்பட்டால் கங்குகள் உயிர்பெற்று எழும்.

ஆகாசம்,பூமி, பாதாளம் உட்பட எட்டு திக்குகளிலும் ஓடோடிச் சென்று ஒளிந்து கொள்ள ஆசைப்பட்டதுண்டு. கடவுளே , என் சுய அறிவையாவது மழுங்கடித்துவிடு என கதறியதுண்டு....,

கால சுழற்சியில் தொலைந்துப் போன என் வாழ்க்கையின் அர்த்தத்தை தேடுகிறேன். ஆனால், விடைதான் கிடைக்கவில்லை. கால ஓட்டத்தில் எனது வினாவையே மறந்திருந்த காலங்கள் உண்டு. அப்பொழுதெல்லாம் மகிழ்ந்ததுண்டு, ஆகா! நம் வினாவுக்கு விடை கிடைத்ததே என்று. வாழ்க்கை சிர்றோடைப் போல் அமைதியாக செல்கிறதே என்று எண்ணி எண்ணி மாயந்த்ததுமுண்டு. இப்படியே நமது வாழ்க்கை கழிந்துவிடும் என்று, இறுமாந்திருந்த வேளையில், சிற்றோடையின் பாதை, மலைமுகட்டை நோக்கி...., சீறி பாய்ந்து, அதலபாதாளத்தில் விழுகிறது. சேதாரம் முன்னைவிட இப்போது அதிகம்.?!


இப்போதும் கடவுளை கெஞ்சுகிறேன். கடவுளே, என் தேடலை இதுவரை தேடி, தேடி சோர்ந்துவிட்டேன். என் பாதையை மாற்று.. அல்லது என் பாதையில் அணையாவது இடு....,

நமது சிறு வயதில் நமது தேடல் அதிகப்பட்சம் குச்சுமிட்டாய், குருவி ரொட்டி இல்லைனா குச்சு ஐஸ் இது மட்டுமே. இதை அடைய நாம் போராடி பின் அதைப் பெற்ற பின் கிடைக்கும் ஒரு திருப்தி இருக்குமே, அந்த திருப்தியை உடை, நகை, கம்ப்யுட்டர்,வண்டி, செல்போன், வீடு, மனை ..., இப்படி எதுவுமே இன்றளவும் தந்ததுமில்லை. ஏன் குச்சுமிட்டாய் , குருவிரொட்டியும் கூட தந்ததில்லை. சில சமயம் இந்த வலைப்பூ தருவதுண்டு. ஆனாலும் இதுகூட அந்த இடத்தை பிடிப்பதில்லை.....???!!!


நடந்து சென்ற கால் களைத்து
நா வறண்டு போகுது
நடந்து வந்த போதெழுந்த
புழுதி வானில் சூழுது..,
தேடுகின்ற பொருளை
இன்னும் , இன்னும், இன்னும்...,
கண்டுகொள்ளவில்லை நான்....????!!!!

தேடிவந்த பொருளுமென்ன?
தெரியவில்லை வினவினால்?

1 comment:

  1. எல்லோருக்கும் இருக்கிறது இந்தத் தேடல் - ஒரு சிலருக்குக் கிடைத்த விடை பல பேருக்கு பிடிபடவில்லை. -நன்று..

    ReplyDelete