Friday, March 08, 2019

தாணுமாலயன் சுவாமி கோயில்,சுசீந்திரம்- புண்ணியம் தேடி

போனவாரம் கரிக்ககம் சாமுண்டிதேவி கோவிலில் தரிசனம் செய்தோமில்லையா?! அப்படியே கோவிலிருந்து நேரா கன்னியாக்குமரி பகவதி அம்மனையும் தரிசனம் பண்ணிடலாம்ன்னு நினைச்சு நேரா  கன்னியாகுமரி நோக்கி பயணமானோம். வழியில் நிறைய இடங்கள் ஏற்கனவே நாம பார்த்த பத்மநாபபுரம் கொட்டாரம் புலியூர்குறிச்சி  வழியா நாகராஜா கோவிலைலாம் தாண்டி சென்று கொண்டிருக்கும்போது, வழியில ஸ்ரீமத் துவாரகை கிருஷ்ணன் கோயில்ன்னு ஒரு அறிவிப்பு பலகை இருந்தது. உடனே, ஸ்டாப்! ஸ்டாப்!ன்னு சொல்லி அந்த கோவிலுக்கு போனோம். அது ஒண்ணும் பெரிய கோவில் இல்ல. இருந்தாலு,ம் அதன் அழகு நிச்சயம் அனைவரையும்  ஈர்க்கும். ஏன்னா இந்த கோவிலின் ஒருபுறம் பழையாறும், ஒருபுறம் வயல்வெளிகள் என இயற்கை எழில்சூழ மன அமைதி தரும் விதத்தில் இத்திருக்கோவில் இருக்கிறதுதான் காரணம். இந்தக்கோவிலின் அமைப்பானது கருவறை, அர்த்த மண்டபம், அந்தராளம், முக மண்டபம், சுற்றாரை மண்டபம், கோவிலை சுற்றிப் பெரிய மதில்கள் என அமைந்துள்ளது. இக்கோவில் கருவறை சிறியது. மூலவர் கிருஷ்ணன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவரை ஆழ்வார் என்றும் எம்பெருமான்ன்னும் சொல்றாங்க.
1208-ம் ஆண்டு  கல்வெட்டுகளில் இந்த இடம் துவாரகை என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நான்கு கல்வெட்டுகளை ஆதாரமாகக்கொண்டு, இப்ப இருக்கிற கருவறையை வேணாட்டு அரசர்கள் கட்டியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. கோயில் விமானம் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. அவை விதுநாகரம் மற்றும் சுதையால் அமைக்கப்பட்டு இருக்கு. கோவிலின் ஆகமம் சிவாச்சாரிய மரபில் இருக்கிறது. இங்கு பரிவாரத்தெய்வங்களாக இருக்கும் சாஸ்தாவும், விநாயகரும் பிற்காலங்களில் வைக்கப்பட்டவை என்றும் சொல்லப்படுது. கோயில் கருவறை அருகே உள்ள பாறையில் காணப்படும் 1239ம் ஆண்டு கல்வெட்டில், “இக்கோயிலில் வடதிருவிதாங்கூரை சேர்ந்த வேதவிற்பன்னரான ஸ்ரீகோவிந்த ப்ரஞ்படரார் ஸ்ரீகான ராமபகவான் என்ற ஞானி இருந்தார். இவரிடம் மாணவர்கள் வேதம் பயின்றனார் அவர்களும் இக்கோயில் அருகில் தங்கியிருந்தனர்.” என்று கூறப்படுகிறது. அதன்படி பார்த்தால், 13ம் நூற்றாண்டில் இது வேதபாடசாலையாக இருந்திருப்பதை அறியமுடிகிறது.  ஆனால், இக்காலத்தில் இது வழிபாட்டு கோயிலாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரிடம் சில மாணவர்கள் வேதம் கற்றுள்ளார்கள். இவர்கள் கோவிலருகே தங்கி படித்து இருந்துள்ளனர். இவர்களின் மூன்று நேரச் சாப்பாட்டுக்கான செலவைச் சுசீந்திரம் கோவில் மகாசபை கவனித்துக்கொண்டது. இந்த துவாரகை கோவில் சுசீந்திரம் தாணுமாலையன் கோவிலுக்கு அடங்கியே இருந்துள்ளது.
கோவிந்தப் ப்ரஞபடரர் முன்னிலையில் சுசீந்திரம் தாணுமாலையன் கோவில் மகாசபை கூடியிருப்பதை 1230-ம் ஆண்டு கல்வெட்டு தெரிவிக்கிறது. கோவிலின் சபை இக்கோவிலுக்கு நித்திய பூஜைக்கு கொடுத்த பொருட்கள் பற்றியும், விளக்கு நிபந்தத்தையும் கூறுகிறது. இந்த கூட்டத்தில் ஸ்ரீபடரர் ஆளுகையின்கீழ் துவாரகை கோவிலின் முழுபொறுப்பை விட்டுக் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது என்றும் தெரிகிறது. மேலும் திருவனந்தபுரம் பத்மநாபபுரம் கோவில் ஸ்ரீ காரியம் பெரிய படரர் சிபாரிசு செய்யும் நபரை துவாரகை கோவிலின் மேல்சாந்தியாக நியமிக்க வேண்டும் என்றும், இதற்குரிய செலவை சுசீந்திரம் கோவில் மேல் மகாசபை கொடுக்க வேண்டும் என்ற செய்திகளையும் கல்வெட்டு தெரிவிக்கிறது. துவாரகை கோவிலின் 1224-ம் ஆண்டு ஆண்டு கல்வெட்டு கோவிலுக்குக் கொடுக்கப்பட்ட விளக்கு நிபந்தத்தையும், 1228-ம் ஆண்டு கல்வெட்டுகோவிலுக்குச் சொந்தமாக இரண்டு குளங்கள் இருந்ததைக் கூறுகிறது.பண்டைய குமரிமாவட்டப் பகுதிகளில் இருக்கும் பார்த்திபசேகரபுரம், கோதைநல்லூர், கன்னியாகுமரி போன்று மாணவர்களுக்கு வேதம் கற்பித்த மையமாக துவாரகை கிருஷ்ணன் கோவில் இருந்துள்ளது. காலை 6 மணி திருநடை திறப்பு, 6.30 மணி  பூஜை, அபிஷேகம், 10 மணி பூஜை. மாலை 5 மணி திருநடை திறப்பு, 6.30 மணி பூஜை, 8 மணி பூஜையின் பிறகு, திருநடை அடைக்க படுகிறது.. இக்கோவிலில், கிருஷ்ணஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடுவாங்களாம். புரட்டாசி மாத சனிக்கிழமை அன்று துவாரகை கிருஷ்ணனை வழிபட்டால் வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம். பக்தர்கள் சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் மும்மூர்த்திகளை தரிசித்துவிட்டு கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் கிழக்கு பார்த்து இருக்கும் துவாரகை கிருஷ்ணனையும்  தரிசிக்காமல் இருப்பதில்லை.நாங்களும் அதேபோல் தரிசனம் முடித்துவிட்டு அருகில் இருக்கும் தாணுமாலயன் சுவாமி கோவிலுக்கு சென்றோம்.
இதுதான் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கோவிலுக்கு செல்லும் வழி. கன்னியாகுமரி கோவில்களில் என்ன ஒரு விஷேசம்னா இத்திருக்கோவில் நடை கேரளவைப்போல் அதிகாலை 4 மணிக்கே திறந்துவிடுவார்கள். அப்பொழுது காலை அபிஷேக ஆராதனைகள் நடக்கும். நாகர்கோயிலிருந்து கன்னியாக்குமரி செல்லும் வழியாக போனால் வலப்பக்கமாக கோவில் இருக்கிறது. இல்லை புதுக்கிராமம்.குறண்டி,நல்லூர் வழியாக சுசீந்திரம் வந்தால் புதியதாக கட்டப்பட்ட மேம்பாலம் வழியாக வந்து தெருவழியாக நேரே கோவிலின் முன்பக்கம் வந்துவிடலாம். சுசீந்திரம் பற்றி கேட்டோம்னா சுசீ+இந்திரம் என்று பிரித்து இந்திரன் அகலிகை மீது ஆசைப்பட்டு அதன்மூலம் சாபம் பெற்று இங்கே வந்து தன் சாபத்தை தீர்த்து சுத்தம் செய்து கொண்டதனால் இப்பெயர் வந்தது என்கிறார்கள். ஆனால் கோயிலில் அகலிகையின் சிலை எங்கும் இல்லை. பழைய பாடல்களில்கூட அதுபற்றிய குறிப்புகள் இருக்கிறதா என்றுத்தெரியவில்லை. அத்திரி முனிவரும், அனுசுயாவும் இங்குள்ள தல விருட்சமான கொன்றை மரத்தினடியில் நின்று வேண்ட முத்தொழில் புரியும் மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்தனர். இதைக் குறிக்கும் விதமாக மும்மூர்த்திகளும் ஒரு முகமாய் தாணுமாலயன் என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளனர். ருத்திரன் (தாணு), விஷ்ணு (மால்), பிரம்மா (அயன்) ஆகிய முப்பெருங்கடவுள்களும் சேர்ந்துள்ள இத்தல மூர்த்தி தாணுமாலயன் என அழைக்கப்படுகிறார் என்றும் சொல்லப்படுவதுண்டு.
இதுதான் தெப்பக்குளம் செல்லும் பாதை. இந்த நுழைவாயில் மண்டபங்களை எல்லாம் என்னுடைய சின்னவயசில இந்த இடத்துக்கு வரும்போது பார்த்ததில்லை. முன்னைவிட நிறைய மாறியிருக்கு.  கோவில் வளாகங்களை நல்ல சுத்தமாகவும் வச்சிருக்காங்க. மேலும் இந்த கோவிலின் ஸ்தல வரலாற்றை பற்றி என்ன சொல்லுறாங்கன்னா  அத்திரி மகரிஷி, தன் மனைவி அனுசுயாவுடன் இத்தலத்தில் ஆசிரமம் அமைத்து தங்கியிருந்தார். அனுசுயா தன் கணவர்மீது கொண்ட பக்தியை உலகத்துக்கு அறிவித்து, அவரைப்போல பெண்கள் தங்கள் கணவருடன் நடந்துக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்த மும்மூர்த்திகளும் துறவி வேடத்தில் வந்தனர். அவர்கள் விசித்திர வேண்டுகோளை ஏற்று அவர்களை குழந்தையாக்கி பின் உணவுக்கொடுத்தார் என்று சொல்லப்பட்டதிலும் சில திரிபுகள் இருக்கலாம் என்றே தோன்றுகிறது பின்னர் அனுசுயாவின் கற்பின் மாண்பினை உலகுக்கு அறிவுறுத்தி முத்தொழில் புரியும் மும்மூர்த்திகளும் தங்களது தேவியருடன் அனுசுயா, அத்திரிக்குக் காட்சி தந்தனர் என்பது வரலாறு. சுசீந்திரத்திற்கு பக்கத்தில் ஆசிரமம் என்ற ஒரு ஊர் இருக்கிறது. இது அத்திரி மகரிஷி ஆசிரமம் அமைத்து தங்கியதால் அந்த இடம், "ஆசிரமம்' என்று அழைக்கப்பட்டு இப்பொழுது ஆஸ்ராமம் என திரிந்து அழைக்கப்படுகிறது.
அத்திரி முனிவருக்கும், கற்பில் சிறந்த மனைவியான அனுசுயாவுக்கும்,  "ஞானாரன்யத்தில் மும்மூர்த்திகளும் லிங்க வடிவில் தோற்றமளித்தனர்" என்று புராணம்  கூறுகிறது.  மூலவரான லிங்கத்தின் மேல் பாகம் – விஷ்ணு, நடுப்பாகம் – சிவன், அடிப்பாகம் – பிரம்மா என  கருதப்படுகிறது .இதன் தாத்பரியம் என்னனா தன்னுடைய அடியையும், முடியையும் காண முடியாத விஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும், கார்த்திகை திருநாளில் தன்னை வழிபட்டதால், தனது முடியிலும், அடியிலும் இடமளித்து அருள்புரிந்தார் என்பதை சொல்லும்வகையில்தான் இங்குள்ள திருமேனி இருக்கிறது என்று ஒரு செவிவழி கதையுண்டு. கற்பின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டி, முத்தொழில் புரியும் மூவரும் ஓருருவாக காட்சி தந்த புண்ணிய தலம்.என்பதால் தம்பதி சகிதமாக வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.
இந்த கோவில் பல்வேறு காலகட்டங்களில் படிப்படியாக மகரிஷிகள், துறவியர்கள், சுற்று வட்டாரத்தை ஆண்ட சிறுதலைவர்கள், சிற்றரசர்கள், முன்கால சேர, சோழ, பாண்டிய நாட்டு அரசர்கள், வேணாட்டு அரசர்கள், சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சியாளர்கள், பிற்கால சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், , திருமலை நாயக்கர்கள், ராணி மங்கம்மாள், திருவிதாங்கூர் மன்னர்கள், முன்னாள் கோவில் நிர்வாகிகளாக இருந்த யோகஸ்தானிகர்கள், ஊர் தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோரால் இந்த அழகான கோவிலின் பல பாகங்கள், பல காலங்களில் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. 5400 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயிலின் ஏழு நிலைகளை கொண்ட ராஜகோபுரத்தின் உயரம் நூற்று முப்பத்தி நாலரை அடி இருக்கிறது .என்னுடைய சிறியவயதில் எங்க  அப்பா இந்தக்கோவிலுக்கு கூட்டிச்சென்றிருக்கிறா.ர் அபொழுதெல்லம் கோபுரத்தில் ஏறிபார்ப்பதற்கு தனிக்கட்டணம் உண்டு. ஒவ்வொரு நிலையிலும் நின்று பார்க்க விசாலமான ஜன்னல் போன்ற அமைப்பு உண்டு. சுவர்களில்லாம் ஓவியங்கள் தீட்டப்பட்டு இருக்கும். நிறைய மாடப்புறாக்கள், வௌவால்லாம் அந்த கோபுரத்தினுள்ளே சுற்றிக்கொண்டே இருக்கும். உச்சி கோபுரத்தில் இருந்துபார்த்தால் கன்னியாக்குமரி கடல் தெரியும். இப்பொழுது கோபுரத்தின் மேல் ஏற அனுமதியும் இல்லை. அப்படி ஏறினாலும் கன்னியாக்குமரி கடல் தெரியாது. ஏன்னா, நிறைய கட்டிடங்கள் வந்துட்டுது. ஏறிப்பார்த்தால்தான் தெரியும் சேதி!!.
இதுதான் கோவிலின் நுழைவாயில். இங்க இருக்கும் சிற்பம் யாழி என்ற மிருகத்தின் சிற்பம். இந்த யாழியின் வாயினுள் ஒரு கல் உருண்டு கொண்டுவரும். ஆனா, வெளியேவராது. சிறுவயதில் பார்த்தது. இப்பொழுதெல்லாம் அவற்றை எல்லாம் தொட்டுபார்க்கமுடியாத அளவு கம்பி கட்டிவச்சிருக்காங்க.இந்த திருக்கோவிலானது இந்திரன் இங்கு வந்து புனிதம் அடைந்ததால் இவ்வூர் சுசீந்திரம் எனப் பெயர்  பெற்றது என்று அழைக்கப்பட்டாலும்  "சுசி" என்றால் புனிதம் (சுத்தம்) இந்திரன் சுத்தம் அடைந்த இடம் என்பதால் (சுசி + இந்திரன்) சுசீந்திரம் எனப்பெயர் வந்தது. என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் .சொல்லுகிறார்கள்,சிலரோ ஸ்ரீஇந்திரம் என்ற பெயரே பழந்தமிழில் சிவிந்திரம் என்று மருவியது என்பது ஆய்வாளர்களின் கருத்து.
ஆனா, ஆய்வாளர்கள் சொல்வது எவ்வளவு சரி, எவ்வளவு தவறு என ஒரு சின்ன குறிப்பு மூலம் நாம தெரிஞ்சுக்கலாம். பொதுவா கோவில்களை பற்றியெல்லாம் அப்ப ஆராய்ச்சிக்கட்டுரைலாம் நேரம்போகாத சில வெள்ளைக்கார அதிகாரிகளின் கற்பனைபடியே நடந்தது. ஒரு வெள்ளைக்காரர் செய்த ஆய்வில் முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டது இந்த கோவிலின் ஒரு சிற்பத்தை பார்த்துவிட்டு அவர்மேற்கொண்ட குறிப்பு ”ஐரோப்பாவில் அமேசான் என்ற வீரப்பெண்கள் இருந்தார்கள். அவர்கள் வில் நாணை இழுத்து அம்புபூட்டும் வசதிக்காக தங்கள் ஒருமார்பை வளரவிடாமல் செய்வார்கள். இதை மேற்கோள் காட்டி ஓர் ஐரோப்பியர் இந்தியக்கோயிலில் ஒரு சிற்பத்தைப் பார்த்து ‘ஓ இங்கும் அமேசான் இருந்திருக்கின்றார்கள் என்று ஆராய்ச்சியை சமர்ப்பித்தார். அதைப்படித்த இந்த அறிஞர்கள் தலையில் அடித்து அய்யோ சாமி ‘ அது அர்த்தநாரீஸ்வரர் சிற்பம்’ என்றனராம். இந்த தகவல் எதற்காக என்றால் திருநெல்வேலி மாவட்டத்தை பற்றி ஆராய்ச்சி செய்த ஒரு பிரிட்டிஷ்காரன் ஆராய்ச்சி குறிப்பையே பெரியதாக சொல்வர். இப்பொழுது அதில் இருக்கிற தவறுகளுக்கே ஒரு ஆராய்ச்சி நடக்கிறதாம். இந்தமாதிரி ஆய்வுகளினால்தான் நிறைய தவறான இடைச்சொருகல்கள் வந்துவிட்டன.
இன்றும் தாணுமாலையனுக்கு அர்த்த சாம பூஜை செய்த பூஜாரி அடுத்தநாள் பூஜைக்கு அனுமதிக்கப்படுவதில்லை. காரணம் ஒருமுறை மாலையில் செய்த அலங்காரங்களை எல்லாம் கலைத்து புதிய பூக்களை கொண்டு இந்திரன் இராத்திரி அங்கிருக்கும் மூலவருக்கு பூஜை செய்வதாக ஐதீகம். மாலையில் பூஜை செய்தவர் அடுத்த  நாள் காலை எல்லாம் மாறி இருந்ததை வெளியில் சொன்னாராம். அதிலிருந்து மலையில் பூஜை செய்த பூஜாரிகள் அடுத்தநாள் பூஜைக்கு அனுமதிப்பதில்லை.  அதேபோல் முன்பு கடுமையான நியதிகள் கடைபிடிக்கப்பட்டன. பூஜை செய்பவர்கள் ஒரு குறிப்பிட்ட நம்பூதிரி குடும்பத்தில் உள்ளவர்களாகவும்  அவர்கள் பிரம்மச்சாரிகளாக மட்டுமே இருக்கவேண்டும் என்றும், அவர்களது வாரிசாக அவருடைய சகோதரியின் மூத்தமகன் அந்த பணியை செய்யவேண்டும் என்பது திருவிதாங்கூர் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நியதி. இப்பொழுதும் அப்படிதான் நடக்கிறதா என தெரியலை. இந்த பஞ்சாயத்தை நான்  துளசி சாரிடமும், கீதாக்காவிடமும் ஒப்படைத்து விடுகிறேன் .
கோவிலின் உள்பிரகாரத்தில் இருக்கும் இந்த தூண்களை தட்டினால்  ஒவ்வொரு ஸ்வர ஓசைவரும். இந்த தாணுமாலயன் கோவில் இருக்கும் ஊரான சுசீந்திரம் என்ற பெயர் கிபி 941 ஆண்டுள்ள கல்வெட்டு ஒன்றில்தான் முதன்முதலில் சொல்லப்பட்டதாம். அதன்பிறகு சுசீந்திரம்  என்ற பெயர்  கிபி 11 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு இந்த ஊரை ‘ராஜராஜப் பாண்டிநாட்டு உத்தமசோழ வளநாட்டு சுந்தர சதுர்வேதி மங்கலம்’ என சொல்கிறது. இக்கோயிலில் உள்ள செண்பகராமன் மண்டபத்தில் உள்ள ஒரு கல்வெட்டில்தான் முதலில் தாணுமாலயன் என்ற பெயர் வருகிறது. இக்கல்வெட்டு 1471 ஆம் எழுதப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த ஸ்தல மூலவர்  சிவலிங்கம்தான். அந்த லிங்கமூலவரை மகாதேவர், சடையார், நயினா, உடையார் எம்பெருமான், பரமேஸ்வரன் போன்ற பெயர்களில் குறிப்பிடுகின்றன.அந்த ஆதிபரம்பொருள் மகாதேவர்தான்   ஸ்தாணு என்றால் ருத்திரன்  மால் விஷ்ணு. அயன் பிரம்மன் இந்த மூவருக்கும் காட்சி கொடுத்த இடம் என்றும் ஒரு செவிவழி வரலாறும் உண்டு.
இந்த தாணுமாலயன் திருக்கோவில் மலையாள-தமிழ் பண்பாட்டு இணைவின் அடையாளமாக இருக்கிறது. இக்கோயில் சோழர்கள் காலத்திற்கு முன்பு தொன்மையான வழிபாட்டு முறைகளைக் கொண்டிருந்தது. கேரளத்தைக் கைபப்ற்றிய சோழர்கள் இங்க இருந்த வழிபாட்டுமுறைகளை ஒழித்து ஆகம வழிபாட்டு முறையை புகுத்தினார்கள். சோழர் ஆட்சிக்குப்பின் கேரள மன்னர்களின் ஆட்சி உருவானபோது ஆகம முறைகள் மீண்டும் தவிர்க்கபப்ட்டு தாந்த்ரீக முறை வழிபாடு கொண்டுவரப்பட்டது. ஆனா சோழர்கள் உருவாக்கிய சடங்குகளும் மரபுகளும் நீடித்தன. ஆகம – தாந்த்ரீக முறைகளின் கலவையாக வழிபாட்டு முறைகள் செய்யப்பட்டன. 11- ஆம் நூற்றாண்டுமுதல் 1956 வரை தொடர்ச்சியாக மலையாள ஆட்சியில் இக்கோயில் இருந்துவந்திருக்கிறது. 800 ஆண்டுகளுக்கும் மேலாக மலையாளப்பிராமணர்களான நம்பூதிரிகளின் நேரடி நிர்வாகத்தில் இருந்து வந்தது. ஆனால் இக்கோயிலின் தமிழ்த்தன்மைகள் அபப்டியே கடைபிக்கப்பட்டன .வழிபாட்டில் ஞானசம்பந்தருக்கும் மாணிக்கவாசகரின் பதிகங்களுக்கு இங்கே முக்கியமான இடம் உண்டு.
மேலும் சிலர் செவிவழியாக சொல்லக்கேட்டவைகளான சிலவரலாற்றுத்தகவல்கள் இந்த கோவிலைப்பற்றி உணடு. கி பி 1720 முதல் 1729 வரை வேணாட்டை ஆண்ட ராமவர்மா என்னும் அரசர் சுசீந்திரம் கோயில் திருவிழாவுக்கு வந்தாராம் .அங்கே தமிழ்நாட்டிலிருந்து வந்து நடனம் ஆடிய அபிராமி என்ற நாட்டிய பெண்ணைக்கண்டு காதல்கொண்டு அவளை மணந்து தன் பட்டத்தரசியாக ஆக்கிக்கொண்டாராம். திருவிதாங்கூர் அரசை ஐரோப்பிய அரச முறையில் மாற்றியமைத்த மார்த்தாண்ட வர்மா [1730 முதல் 1758  வரை] சுசீந்திரம் கோயிலுக்கு வர விரும்பினார். அவர் நாகர்கோயிலில் இருந்துகொண்டு தகவலைச் சொல்லியனுப்பினார். கோயில் பொறுப்பில் இருந்த நம்பூதிரிப்பிராமணர்கள் கோயிலை முன்னரே இழுத்துச் சாத்திவிட்டுச் சென்றுவிட்டார்கள். கோயிலுக்கு வந்த மார்த்தாண்ட வர்மா மகாராஜா அவமானப்படுத்தப்பட்டார். கோபங்கொண்ட அவர் தன் தளபதியான தளவாய் ராமய்யனிடம் அந்த கோபத்தைச் சொல்ல ராமய்யன் சுசீந்திரத்துக்கு வந்து படைபலத்தால் பிராமணர்களை சிறைப்பிடித்து நாடுகடத்தினார். கோயிலை நேரடி அரசாங்கக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்தார்.அப்பொழுது எல்லாம் தங்கள் சுயகட்டுப்பாட்டில்தான் இக்கோவில் இயங்கி இருக்கிறது போல!!.
இப்பொழுது பாலியல் தொல்லை நடப்பது போன்று அப்பொழுதும் நடந்திருக்கும் போல!! அதுக்குறித்த ஆர்வமூட்டும் சில செய்திகளும் இந்த கோவிலிலும் உண்டாம். அது சுசீந்திரம் கைமுக்கு தண்டனை. பாலியல் மீறல் போன்ற பிழைகளைச் செய்த நம்பூதிரிகளை கொண்டுவந்து கொதிக்கும் எண்ணையில் கைவிட்டு சோதனைசெய்யும் தண்டனை முறை இங்கே நெடுங்காலம் இருந்தது. ஒரு நம்பூதிரி, தண்டனைக்கு அஞ்சி கோயில் மீதேறி குதித்து தற்கொலை செய்துகொண்டார். அதைத்தொடர்ந்து இதை தடைசெய்யவேண்டுமென கோரிக்கை எழுந்ததால் . அதை மகாராஜா சுவாதித்திருநாள் சுசீந்திரம் கைமுக்கு வழக்கத்தை நிறுத்தம் செய்தார். மகாராஜா காலத்தில் தண்டனைகள் எல்லோருக்கும் பொதுவானதாகவே இருந்திருக்கிறது .
1916லயே ஆலய நுழைவு பற்றிய போராட்டம் எழுந்தது. 1930ல் நேரடிப்போரட்டமாக இது வெடித்தது. 1924 ல் நாராயண குருவின் மாணவரான மாதவன் தலைமையில் போராட்டம் நடந்தது.1936ல் திருவிதாங்கூர் மன்னர் கோயில் நுழைவுரிமையை அனுமதித்து பிரகடனம் வெளியிட்டார். 1937 ஜனவரியில் மகாத்மாகாந்தி நேரில் வந்து சுசீந்திரம் கற்காடு பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுடன் இணைந்து சுசீந்திரம் கோயிலுக்குள் நுழைந்தார். அப்போதைய தேவசம் உயரதிகாரி மகாதேவ அய்யர் அரசு ஆணையின்படி காந்தியை கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். இதுபோன்ற வரலாறுகள் எல்லாம் அங்கே இருந்த ஒரு பெரியவர் சொல்லிக்கொண்டு இருந்தார். ரொம்ப வரலாற்று தகவல் சொன்னா இதென்ன புண்ணியம் தேடி ஒருபயணமா இல்லை மௌன சாட்சியான்னு கேட்டுடப்போறீங்க .
 திருக்கோவிலின் நுழைந்தவுடன் முதல் சன்னதி இந்த தட்சிணாமூர்த்தியை வழிபட்டு, ஆதிசன்னிதி எனப்படும் கொன்றையடியில் உள்ள மும்மூர்த்திகளை வழிபட வேண்டும்.  வெளியே வரும்முன் நந்தியின் முன்பு இந்திர விநாயகர்  சன்னதி. தத்தாத்ரேயர் சன்னதி  - மூலக்கொவிலில் சுப்ரமணிய  சுவாமி, நடராஜர், திருவேங்கட விண்ணகர பெருமாள், பள்ளிக்கொண்ட பெருமாள், கொன்றையடி  தாணுமலயான் மற்றும்  நவகிரகங்கள் வசந்த மண்டபத்தின் மேல்  தளத்தில் உயரே உள்ளது. இது சிவனும் பார்வதி தேவியும் இக்கோவிலில் அமர்ந்து யாகம் செய்தபோது  நவகிரகங்கள் மேலிருந்து கீழ் நோக்கி வழிப்பட்டதால் எல்லா நவக்கிரங்கங்களும் கீழ்நோக்கி  பார்க்கின்றார்கள் என்பது ஐதீகம் வீரபத்ரர்சிலை. குறவன் குறத்தி சிலைகள். கல்லை உலோக வழவழப்புவரை கொண்டு சென்று தீட்டி இருப்பது  நுட்பமான மிகத்தேர்ச்சியான கலையின் வடிவமைப்பை பார்த்து நமக்கே வியப்பாக உள்ளது. தாணுமாலய சுவாமி கருவறை கோஷ்டத்தின் பின்புறம், உள்பிரகாரத்தில் மரச்சட்டத்தினால் ஆன 27 நட்சத்திர தீபக்குழிகள் இருக்கு. கார்த்திகை திருநாள் மற்றும் பவுர்ணமி நாட்களில் தூய பசுநெய் கொண்டு, தாமரைத் திரி போட்டு, 27 நட்சத்திர தீபக் குழிகளிலும் தீபமேற்றி வழிபட்டால், ஜாதகத்தில் உள்ள தோஷங்கள், நம் கர்மவினைகள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை.கருவறை கோஷ்டத்தைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் உள்ள விநாயகரையும், சங்கரநாராயணரையும் தொடர்ந்து 8 பவுர்ணமி நாட்கள், 5 அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், தடைகள் அகன்று சுபகாரியங்கள் சீக்கிரம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
 வெள்ளை நிறத்தில் 12 அடி உயரமுள்ள வெள்ளை நந்திசிலை காணப்படுத்து இந்த  நந்தி சிலை சங்கால் அரைத்து  செய்யப்பட்டது.  அதனை அடுத்து ஸ்ரீநீலகண்ட விநாயகர் சன்னதி இருக்கிறது.  பிரகார  மண்டபத்தின் தூண்களின்கீழ் பாவை விளக்குகள் வரிசையாக உள்ளன. குலசேகர ஆழ்வார் மண்டபத்தில் சங்கீதத் தூண்கள் உள்ளன.அதன் நடுவே 18 வருடங்களாக தொடர்ந்து ஏரிந்து  கொண்டிருக்கும் அணையா விளக்கு காடா விளக்கு எரிந்துகொண்டுள்ளது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட  துவார  பாலகர் இந்த கோவிலின்  தனிச்சிறப்பு. இங்கிருக்கும் சுப்பிரமணியசுவாமி கோவில் கண்டியூர் உண்ணி என்பவரால் 1238-ம் ஆண்டு கட்டப்பட்டு அதன் நித்திய செலவுக்கு நிலங்களை கொடுக்கப்பட்டதற்கான  ஆதார கல்வெட்டுகள் காணப்படுகிறது.1444-ம் ஆண்டு அறம் வளர்த்தம்மன் கோவில் தேரூரில் உள்ள பள்ளியறை நாச்சியார் குடும்பத்தாரால் கட்டப்பட்டதாகும். 1471-ம் ஆண்டு வீர பாண்டியன் மணி மண்டபத்திற்கு முன்பாக மிகப்பெரிய அரிய வகை கலை சிற்பங்கள் நிறைந்த செண்பக ராமன் மண்டபம் வேணாட்டு ராஜாவான ராமவர்ம ராஜாவால் கட்டி முடிக்கப்பட்டது.1545-ம் ஆண்டு மிகவும் எழில்மிக்க ராஜகோபுரம் விஜயநகராட்சி காலத்தில் விட்டல மகாராஜாவால் கட்டப்பட்டது. 1587-ம் ஆண்டு தெற்கு மண்டபத்தில் புருஷோத்தமரு நீலகண்டரு என்பவரால் பெரிய பிள்ளையார் கோவில் கட்டப்பட்டது. முக்குறுணி பிள்ளையார் என்று கூறும் அந்த கணபதியின் நித்திய செலவுக்கு தேவையான நிலங்களையும் சொத்துக்களையும் இந்த பிள்ளையாருக்கு எழுதிவைத்துள்ளார் .அந்த விநாயகரை “நீலகண்ட விநாயகர்” என்று இப்போதும் அழைக்கப்படுகிறது. அவரை பெருமைப்படுத்த கோவில் மேலாளர் அலுவலகத்திற்கு முன்னால் தெற்கு பக்கமாக அவரது சிலை வைக்கப்பட்டுள்ளது.1888-ம் ஆண்டு மின்னல் தாக்கியதால் கோபுரம் பாழனது, இப்போது  சீர் செய்யப்பட்டது. இவ்வளவு விவரங்களும் ஆண்டுவாரியாக இந்த திருக்கோவிலில் விரிவுபடுத்தப்பட்ட பணிகளாகும்.
கோவிலின் வெளிச்சுற்று பிரகாரமண்டபம் பரப்பிலும் அழகிலும் ராமேஸ்வரம் பிரகாரமண்டபம் போலவே பெரியதாக இருக்கிறது. குலசேகர மண்டபத்தின் கீழ்புறத்தில் “அறம் வளர்த்த அம்மன்” கருவறை உள்ளது. கருவறையில் தாணுமாலயப் பெருமான் இரண்டரை அடி உயரமுள்ள இலிங்க உருவில் அமைந்து அருள்பொழிகிறார். இலிங்கத்தின் மேலே 16 சந்திர கலைகளுடன் படம் விரித்த நாகராஜர் இருக்கிறார். கொன்றையடி 3000 வருடங்கள் பழமை வாய்ந்தது. இந்த கொன்றை மரம் 2000 வருடங்களுக்கு முன் உயிர்ப்புடன் இருந்ததாக ஆராய்ச்சியில் சொல்லப்படுகிறது. ஆலயத்தின் உள்கருவான இந்த மையத்தை வைத்துதான் இந்த கோவில் எழுந்துள்ளது. முக்கிய மூலஸ்தானமாகிய கோவில் சுயம்புவாக கருதப்படுகிறது. வடகேடம் என்ற அதில் தாணுமாலய மூர்த்தியாக வழிபட்டு வருகிறார்கள். தெக்கேடம் என்ற மகாவிஷ்ணு திருவேங்கடபெருமாளாக காட்சி தருகிறார். உள்பிரகாரத்தில் இருக்கும் பாறையின்மேல் உயரமாக அமைந்துள்ள கைலாயநாதர் கோவில் மண்டபம் பார்பதற்கே அழகு. இந்த மண்டபம்  5-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கல்வெட்டுக்கள் சொல்கின்றது.
இங்கே கவனிக்கப்படவேண்டிய முக்கியமான விஷயம் இந்த சுசீந்திர தாணுமாலயனுக்குத் திருமுழுக்காட்டு நடைபெற்றதும் அப்புனித நீர் நிலத்தடியே சென்று கன்னியாகுமரிக் கடலில் ஓர் இடத்தில் கலக்கிறது. அது “தாணுமாலயத் தீர்த்தம்” என அழைக்கப்படுது. முன்பு இருந்தவர்களுக்கு அந்த இடம் பற்றி தெளிவாக தெரியுமாம். இப்பொழுது அதுபற்றி அறிந்தவர்கள் குறைவு என்றே சொல்கிறார்கள். அடுத்து சித்திர சபையில்  சுவற்றை ஒட்டி, இராமபிரானின் கருவறைக்கு எதிரில் மிகப்பெரிய அனுமன் சிலை காணப்படுகிறது.  மூலதிருநாள் மகாராஜா காலத்தில் சுசீந்திரம் மேலக்கோபுரம் விரிவுபடுத்த அஸ்திவாரம் தோண்டியபோது கிடைத்த மாபெரும் ஒற்றைக்கல் அனுமார் சிலை  கிடைத்தது. இதற்கும் ஒரு சுவராஷ்யமான வரலாறு உண்டு. 
1740 ஜனவரி மாதம் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மா மகாராஜாவின் படைவீரர்களின் ஒரு பிரிவினர் குளச்சலில் டச்சுப்போர் வீரர்களுடனும், மற்றொரு பிரிவினர் வடக்கே காயங்குளம் மன்னரிடமும் போரிட்டு கொண்டிருந்த சமயம் பார்த்து ஆற்காடு நவாப்பான சந்தாசாகிப் அவரது சுகோதரர் போடாசாகிப் மற்றும் படைத்தளபதி சப்தர் அலிகான் ஆகியோர் நாஞ்சில் நாட்டை நோக்கி தந்திரமாக குறுக்குவழியில் படையெடுத்து வந்தனர். ஆரல்வாய்மொழி கோட்டையை கடந்து அஞ்சுகிராமம் வழியாக வரும்போது அவர்கள் அறுவடைக்காக காத்து நின்ற நெற்பயிர்களையும், தானியங்களையும் சூறையாடி அழித்தனர்.
ஈத்தங்காடு என்னுமிடத்தில் வந்தபோது அன்றைய வட்டப்பள்ளி ஸ்தானிகர் தலைமையில் ஊர் பொதுமக்கள் சேர்ந்து கடும் சண்டை நடத்தினர். இதில் வட்டப்பள்ளி ஸ்தானிகர் உட்பட பொதுமக்கள் பலர் சரியான ஆயுதங்கள் இல்லாமையால் முஸ்லீம் படைகளால் கொல்லப்பட்டனர்.குறுக்கு வழியில் வெற்றியடைந்த நவாப் தனது படையோடு பழையாற்றை கடந்து சுசீந்திரத்தை வந்தடைந்தான். மார்கழி திருவிழா முடிந்து மிக கம்பீரமாக நின்று கொண்டிருந்த அன்றைய சுவாமி தேரை தீயிட்டு கொளுத்தினான். கோயிலின் உட்பகுதியை சேதப்படுத்தினர்.  நவாபின் கூலிப்படைகள். ஈத்தங்காட்டில் போர் நடந்து வந்த வேளையில் உள்ளூர் பொதுமக்கள் கோயில் சம்பந்தப்பட்ட பொருட்களை கருவறைக்குள் இட்டு பூட்டி சுவரெழுப்பி பாதுகாத்தனர். அந்த சமயம் 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலையை காப்பாற்ற மண்ணுக்குள் புதைத்து மறைத்து வைத்தனர் அதன் பிறகு 2 நூற்றாண்டுகளாக புதைந்து கிடந்த ஆஞ்சநேயரை பற்றிய தகவல் யாருக்கும் தெரியவில்லை
சித்திரை திருநாள் மன்னர் மகாராஜாவாக பொறுப்பேற்றதும் சி.பி.ராமசாமி ஐயர் திவானாக இருந்த சமயம், எம்.கே.மாங்கொம்பு நீலகண்ட ஐயர் தேவஸ்தான கமிஷனராகவும், கேரளவர்மா கண்காணிப்பாளராகவும், பரமேஸ்வர சர்மா வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகராக இருந்த சமயம் ஆஞ்சநேய சுவாமி மண்ணிற்குள் இருந்து எடுக்கப்பட்டு, வட கிழக்கு மூலையில் ராமபிரானின் எதிரே 1930மே 2ம்தேதி (1105சித்திரை19) நிறுவப்பட்டார். 18 அடி உயர இந்த ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வழிபட்டால், உடல் நோய்கள், கிரக தோஷங்கள் அகலும். செவ்வாய், சனி, மூல நட்சத்திர நாள், அமாவாசை நாட்களில் வெண்ணெய் சாத்தி வழிபடுவது உகந்தது.
திருக்கார்த்திகை திருநாளில் சுசீந்திரம் சென்று, தாணுமாலயனை வழிபட்டால் நம் வாழ்வும், நம் சந்ததியினரின் வாழ்வும் நல்லமுனேற்றம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தல தாணுமாலய சுவாமியின் லிங்க வடிவில் சாத்தப்பட்டுள்ள தங்கக் கவசத்தில், சுவாமியின் திருமுகம், அதன் மேற்புறம் 14 சந்திரப் பிறைகளும், அதன் மேல் ஆதிசேஷனும் காட்சி யளிக்கின்றன.இங்குள்ள அலங்கார மண்டபத் தூணில் உள்ள விநாயகியை, 8 அமாவாசை தினங்கள் தீபம் ஏற்றி வழிபட்டால், பெண்களின் மாதவிலக்கு பிரச்சினை தீரும் என்று கூறப்படுகிறது.நீலகண்ட விநாயகரின் முன்பு உள்ள வசந்த மண்டபத்தின் மேற்கூரையில் பன்னிரண்டு ராசிகளும், நவக்கிரகங்களும் உள்ளன. இந்த வசந்த மண்டபத்தூணில் கால பைரவர் சிற்பம் உள்ளது. இங்கு 8 செவ்வாய்க் கிழமைகளில் தீபமேற்றி வழிபட, வீடு கட்டும் யோகம் உண்டாகும். தடைபட்ட கட்டிட வேலைகளும் தடையின்றி நடைபெறும்  என்பதும் ஐதீகம்.இந்த கோவிலின் திருநடை காலை 4.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.ஒருவழியாக தரிசனத்தை முடித்துக்கொண்டு திருக்கோவிலை விட்டு வெளியே வந்தோம் .
கோயிலுக்கு முன்னால் வெளியே தெப்பக்குளத்தின் வடகரையில் முன் உதித்த நங்கை என்னும் ஆதிபராசக்தி காளிக்கோயில் ஆலயமும், அதனை அடுத்துள்ள திருவாவடுதுறை திருமடத்தில் காலபைரவர் தனி ஆலயமும் உள்ளது. இந்த முன் உதித்த நங்கை அம்மனும், காலபைரவரும்தான், மும்மூர்த்தி தலமான சுசீந்திரம் திருத்தலத்தின் காவல் தெய்வங்களாவர். இந்த முன்னுதித்த நங்கை என்ற கோயில்தான் ஆகப்ழையது. ஆனா இங்கிருக்கிறவங்க இந்த அம்மனை முன்னூற்றி அம்மன் என்று திரித்து அழைக்கிறாங்க ,கோவிலை சுற்றி சுற்றி நடந்து கால்வலிக்கிறதுனால கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திட்டு அடுத்தவாரம் வேறு ஒரு புண்ணிய ஸ்தலத்தில் இருந்து உங்களை சந்திக்கிறேன்.
நன்றியுடன்
ராஜி 

19 comments:

 1. மகளிர் திருநாள் வாழ்த்துகள் சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வாழ்த்துக்கு நன்றி சகோ..

   Delete
 2. மகளிர் தின வாழ்த்துகள் சகோதரி / ராஜி.

  சுசீந்திரம் படங்கள் எல்லாம் போட்டு என் நாகர்கோவில் நினைவுகளை மிட்டிவிட்டீர்கள். - துளசிதரன்

  ராஜி சுசீந்தரம் நிறைய மாற்றங்கள்....துவாரகை கிருஷ்ணன் போனீங்களா.. சூப்பர்..அழகான இடம்...பழையாறு அதான் சுசீந்தரம் வழியாதானே கன்னியாகுமரி வரைக்கும் போய்க் கலக்குது...பறக்கை போகலையோ...அதுவும் அழகான இடம்....பசுமையா இருக்கும் ஊர்...

  இப்ப அங்கும் எல்லாம் மாறி அழிந்து வருதுனு தெரியுது.

  படங்கள் எல்லாம் நீங்க எடுத்ததா? கோயில்ல எடுக்க விடறாங்களா...அந்த நீள பிராகாரம் எல்லாம் பார்த்ததும் பழைய நினைவுகள்...- கீதா

  ReplyDelete
  Replies
  1. நன்றி துளசிதரன் சார்...உங்கள் ஊருக்கே வந்து பலபதிவுகள் பதிவு செய்துவிட்டேன்.எவ்வுளவு பார்த்தாலும் ஆசைதீராத எழில் காட்சிகளை கொண்ட மலைகள்,பசுமையான வயல்கள் ,ஆறு,குளம் எல்லாம் இருந்த இடம்,இப்பொழுது மாறிக்கொண்டே வருகிறது எனும் போதுதான் வருத்தமாக இருக்கிறது.காலச்சக்கரம் சுழன்று ஓடும் போது,நாகர்கோயில் தன் எழிலை தக்கவைத்துக்கொள்ளுமா,இல்லை கால ஓட்டத்தில் கரைந்துவிடுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

   Delete
  2. நன்றி கீதாக்கா...உங்களுக்கும் எனது இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்கா.அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா எனும் சிறிய கோவில் ,துவாரகை கிருஷ்ணன் கோவில் எல்லாம் தரிசித்தேன்க்கா,உள்ளூர் வழிகாட்டி ஒருவர் மூலம் தான் ஒவ்வெரு இடமாக பார்க்கமுடிந்தது.சுசீந்திரத்தில் போட்டோக்களை எடுக்க அனுமதி இல்லை.எங்களை கோவிலுக்கு அழைத்து சென்ற உள்ளூர் அண்ணாவிடம் கேட்டு பெறப்பட்டவை.பறக்கை போகநேரம் கிடைக்கவில்லைக்கா, ஆனாபறக்கை வில்லுப்பாட்டு என்றால் என்னக்கா,நீங்க சொன்னபிறகுதான் நியாபகம் வருகிறது.

   Delete
 3. அய்யோ சாமி ஆராய்ச்சி...!

  ReplyDelete
  Replies
  1. சாமி பற்றிய ஆசாமியின் ஆராய்ச்சின்னே,அப்பவே ஒரு வில்லேஜ் விஞ்ஞானியாக வரவேண்டியவ,இப்படி ப்ளோக் பக்கம் அலையவிட்டுட்டாங்களே....

   Delete
 4. இந்த ஆலயத்தை 2014 மற்றும் 2018ல் தரிசிக்கும் பாக்கியத்தைப் பெற்றேன். இந்த கட்டுரையை வாசித்த பின் இங்கு போயிருந்தாலமின்னும் நற்றாக இருந்திருக்கும். இங்குள்ள இசைத்தூண்களை தட்டி ஒலி எழுப்பிய ஒரு நபர் 200 ரூபாய் கேட்டார். கொடுத்துவிட்டுத்தான் வந்தோம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி சகோ,நன்றாக தரிசனம் செய்தீர்கள் என்றதும் மகிழிழ்ச்சியாக இருந்தது.ஆனால் கட்டியது யாரோ,அதை தட்டிக்காட்டியதற்கு 200 ரூபாய் வாங்கியவரை என்னவென்று சொல்வது,கட்டியவர்கள் இருந்தால் வெட்டிவிட்டு சென்றிருப்பார்கள்.கோவில்கள் எல்லாம் வியாபார மடங்கள் ஆகிவிட்டன என்பதை நினைக்கும் போதுதான் வருத்தமாக இருக்கிறது.

   Delete
 5. அனுசுயாவும் - should be Anasuya - without asUya (jealous)

  ReplyDelete
  Replies
  1. மனஸிலாயி..அவரு அஸுகியா ஆகான்சிரமிச்சிட்டுமிலா, பதிபத்னி தர்மம் மட்டுமே அவருடையதாய லோகம்...

   Delete
 6. அழகிய படங்கள். அழகிய கோவில். செல்லவேண்டும் ஒருமுறையாவது!

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் சென்று வாருங்கள் சகோ,இவை எல்லாம் புராண காலத்து கோவில்கள்.நாம் வாழ்க்கையில் ஒருமுறையாவது சென்று தரிசிக்கவேண்டிய கோவில்கள்...

   Delete
 7. போன வருடம் மிக சிறப்பான தரிசனம் இந்த தாணுமாலயன் திருக்கோவிலில் எங்களுக்கும் கிடைத்தது ,,...அருமையான இடம்

  இன்றைய பதிவில் நிறைய வரலாற்று தகவல்கள் ராஜி க்கா ...மிக சிறப்பு

  ReplyDelete
  Replies
  1. நல்லது அனு,படிக்கும் வரலாற்றை இந்த பதிவில் கூடுதலாக சேர்த்தது நம்மபெயரும் நாளை வரலாற்றில் இடம் பெறவேண்டும் அல்லவா...ஆனா படிக்கும் போது என் வரலாறு பாடத்தின் மார்க் மட்டும் யாரும் கேட்கக்கூடாது.ஏன்னா டோட்டல் இமேஜ் போய்டும்...ஹா...ஹா ..

   Delete
 8. தாணுமாலயன் திருக்கோவில் - சிறு வயதில் சென்ற நினைவு.

  ReplyDelete
  Replies
  1. சரி பரவா இல்லை மீண்டும் ஒருமுறை அண்ணியோடு சென்றுவாங்கண்ணே.நல்ல அழகான பெரிய கோவில் ...

   Delete
 9. நிறைய தகவல்கள் தந்திருக்கீங்க. நல்ல படங்களும் இணைத்திருக்கீங்க.

  நாங்கள் சென்றிருந்தபோது, அனுமாருக்கு தண்ணீர் விட (திருமஞ்சனம் என்ற பெயரில்) பணம் வாங்கி கொஞ்சம் அசிரத்தையாக தண்ணீரை காலில் கொட்டியது ரசிக்கும்படி எனக்கு இல்லை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ,அந்த அனுமன் சன்னதியில் நடக்கும் கொள்ளைகள் கொஞ்சநஞ்சமல்ல,ஆனாலும் மானிட பிறவிகள் செய்யும் கர்மாவானது,அவனவன் செய்த கர்மம் தன்னை அவனவன் தன்னே சுமந்து தீர்க்கணும்ன்னு சொல்லுவாங்க,அவங்க எப்படியோ போறாங்க,நாம நமக்கு மனசில உள்ள குறைகளை சொல்லிவிட்டு வந்துவிடுவோம்,அதை எண்ணினால் நமது சமாதானமே கெடும்.விரைவில் நெல்லையப்பர்,காந்திமதி கோவிலுக்கு வந்து தரிசிக்கவேண்டும் என்ற ஆவலும் இருக்கிறது.

   Delete