Wednesday, March 20, 2019

வண்ணங்கள் நிறைந்து வழியும் ஹோலிப்பண்டிகை

மனிதனின் பருவக்கால மாற்றத்தை விழாக்கள் எடுத்து கொண்டாடுவது இயல்பு. ஆனா, இயற்கையோட பருவக்கால மாற்றத்தை வரவேற்கும் விதமான ஒரு கொண்டாட்டம்தான் ஹோலி பண்டிகை என்கிற அரங்கபஞ்சமி.
இந்தப் பண்டிகை இந்தியா, நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளில் குறிப்பிட்ட இனத்தவரால் இப்பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுது.குஜராத் போன்ற சில மாநிலங்களில் இப்பண்டிகையை 5 நாட்கள் கொண்டாடுகின்றனர். மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதே  ஹோலி பண்டிகையின் முக்கிய குறிக்கோளாகும்.  இந்த பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும். பனிக்காலத்திற்கு விடையளித்து, வெயில் காலத்திற்கு வரவேற்புரை வழங்கும் காலத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். விவசாயிகள் அறுவடை முடித்து மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவார்கள். இந்த பண்டிகை பங்குனி மாதம் பௌர்ணமியன்று (மார்ச் மாதம்) கொண்டாடப்படும்.
கிருஷ்ண பகவான் தன் இளமை பருவத்தில் இப்பண்டிகைய கோபியர்களுடன் விளையாடியதுதான் இந்த ஹோலி பண்டிகை. இப்பொழுதும் ஹோலிப் பாடல்களில் கிருஷ்ணரின் லீலைகளையும், குறும்புகளையும் விவரித்து பாடுவர். இந்த பண்டிகை ராதாவும் கிருஷ்ணரும் விளையாடிய விளையாட்டு. இந்த பண்டிகையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது, 'பிச்கரிஸ்' என்னும் வண்ண நீரை பீய்ச்சி அடிக்கும் குழாயில், 'குலால்' என்னும் பல வண்ண நிறங்களில் இருக்கும் சிறுசிறு துகள்களை கலந்து ஒருவர் மீது ஒருவர் தெளித்து விளையாடி மகிழ்வர்.
ஹோலி பண்டிகையின் மற்றொரு வரலாறு ;
இரணியன் என்னும் அரக்கன், தன்னையே எல்லோரும் கடவுள் என தொழவேண்டும் என பேராசை கொண்டு கடுந்தவம் புரிந்து இப்படிப்பட்ட மரணம்தான் வேண்டும் என தவம் செய்து வரம் வாங்கி, பலவிதமான அட்டூழியங்களில் ஈடுபட்டான்.  இரணியனின் மகன் பிரகலாதனே அதை எதிர்த்தான். பிரகலாதன்,  மகாவிஷ்ணு ஒருவரையே கடவுள் என்று போற்றி, பூஜித்து வந்தான். இதையறிந்த இரணியன், மகனென்றும் பாராமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி, தன்னையே கடவுள் என பூஜிக்கும்படி வற்புறுத்தினான். இதற்கு ஒரு வழி காண நினைத்த இரணியன் தன் சகோதரி ஹோலிகாவின் உதவியை நாடினான். 
ஹோலிகா, நெருப்பினால் எரியாத தன்மை படைத்தவள். எனவே, தன் மகன் பிரகலாதனை அழிக்கும் பொருட்டு இரணியன், பிரகலாதனை தன் மடியில் அமர்த்திக் கொண்டு ஹோலிகாவை நெருப்பின் நடுவில் அமரும்படி கூறினான். இதனால், பிரகலாதன் நெருப்பில் எரிந்து விடுவான் என்றும் இரணியன் நினைத்தான். ஆனால் மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தபடி ஹோலிகாவின் மடியில் அமர்ந்தான் பிரகலாதன். மகாவிஷ்ணுவின் கருணையால் பிரகலாதன் நெருப்பிலிருந்து மீண்டான். ஆனால் ஹோலிகா நெருப்பில் எரிந்து சாம்பலானாள். இதை குறிக்கும் வகையில் ஹோலி பண்டிகையன்று வெட்ட வெளியில் தீயை மூட்டி, அதன் ஒளியில் எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்வர். ஹோலிகா அழிந்த தினத்தை ஹோலி என்று கொண்டாடுகின்றனர்.
ஹோலி பண்டிகைக்கு முதல் நாள் இரவு ஹோலிகா தகனம் என்ற நிகழ்ச்சி நடைபெறும். அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மேல்  மரக்கட்டைகளை வைத்து எரியூட்டி, அக்னிதேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து இனிப்பு பண்டங்களுடன் பூஜை செய்யப்படும். அப்போது ஹோலிகா தகனமாவதை ஒட்டியும்,  பிரகலாதன் உயிர் பெற்று எழுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பக்தர்கள் ஹோலி, ஹோலி என்று உற்சாகக்குரல் எழுப்புவார்கள். தேங்காயுடன் பூஜை செய்யப்பட்ட இனிப்பு வகைகளையும் அக்னியில் போடுவார்கள். மறுநாள்  மக்கள் ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளைத் தூவி, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இந்த பொடி காற்றில் உயரப் பறந்து தேவர்களையும் மகிழ்விப்பதாக ஐதீகம். 
உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா மற்றும் பிருந்தாவனத்தில் தன்னைவிட ராதை சிவப்பாகவும் அழகாகவும் இருப்பதாக கண்ணன் எண்ணி கவலைப்பட, க்ருஷ்ணனின் வருத்தத்தை போக்க கோகுலவாசிகள் க்ருஷ்ணன்மீது வண்ணப்பொடிகளை தூவி விளையாடினர். அவர்கள் இருவரும் பிருந்தாவனத்தில் கோபியர்களுடன் விளையாடும்போது, ராதையின் மீது கண்ணன் விளையாட்டாக கலர் பொடிகளை பூசி மகிழ்கிறான். கண்ணனை ராதை செல்லமாக அடித்து விளையாடுகிறாள். இதை கொண்டாடும் விதமாக கணவன்&மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும்போது, கணவனை தன்னிடம் உள்ள துணியால் மனைவி அடித்துக் கொண்டே இருப்பாள். கணவன் எவ்வளவு அடி வாங்குகிறானோ, அந்தளவுக்கு தன்மீது மனைவி பிரியமாக இருக்கிறாள் என்று மகிழ்கின்றனர்.
சைவ சமயம் சார்ந்த மற்றொரு வரலாற்றை பார்ப்போம்...

ஒரு முறை மலைமகளான பார்வதி தட்சனுக்கு மகளாகப் பிறந்தார். அப்போது சிவனை கணவனாக அடைய வேண்டி தவம் இருந்தாள். சிவனும் அவரது தவத்தை மெச்சி, பார்வதியை மணக்க தட்சனிடம் பெண் கேட்டார். சுடுகாட்டில் வசிக்கும் உனக்கு என் பெண்ணை தரமாட்டேன் என தட்சன் ஆணவத்துடன் கூறினான். இதனால் கோபம்கொண்ட சிவப்பெருமான் தன்னிலை மறந்து தவம் செய்யத் தொடங்கினார். உலக இயக்கங்கள் அனைத்தும் நின்றுவிட்டன. தேவர்களும் முனிவர்களும் செய்வதறியாது திகைக்க, மகாவிஷ்ணுவோ மன்மதனை அழைத்து மன்மத பாணம் விடுமாறு கூறினார். மன்மதன் விட்ட அம்பு சிவபெருமானை சீண்டியது. தனது தவத்தை கலைத்ததால் கோபம் கொண்ட சிவபெருமான், தனது நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார். பின்னர் பார்வதி மீது மையல் கொண்டு, அவரை திருமணம் செய்தார். 
இதைத் தொடர்ந்து, தங்கள் இருவரையும் சேர்ப்பதற்காகவே எனது கணவர் மன்மதன் உதவி செய்தார். அவரை மீட்டு தாருங்கள் என்று மன்மதனின் மனைவி ரதி வேண்டினாள். அவளது கோரிக்கைக்கு சிவபெருமான் செவிசாய்த்து மீண்டும் மன்மதனை உயிர்த்தெழ செய்தார். இந்த நிகழ்வையொட்டியே ஹோலி கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது.

 இத்தகைய சிறப்புமிக்க ஹோலி பண்டிகையை காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் தினமாகவும் கொண்டாடுகிறார்கள். தங்கள் மனதுக்குப் பிடித்தவர்களை வரவழைத்து, அவர்கள் முகங்களில் சாயங்களை பூசி, தங்களின் அன்பை வெளிப்படுத்துகின்றனர். மொத்தத்தில், அனைத்து தரப்பு மக்களும் புன்னகையுடனும் சகோதரத்துவத்துடனும் தங்கள் அன்பை வெளிப்படுத்தி மகிழும் தினமாக இந்த ஹோலி பண்டிகை அமைகிறது.வடமாநிலங்களில் மிக சிறப்பாக கொண்டாடுவதைப் போல், தென்னிந்தியாவில் அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து நாமும் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்வோம்.


மீள்பதிவு..
நன்றியுடன்,
ராஜி.

14 comments:

  1. அடேங்கப்பா ஹோலிக்காக எத்தனை வகையான கதைகள்.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் ஆளுக்கொரு நம்பிக்கை. சமயத்துக்கு ஒரு கதை

      Delete
  2. ஹோலி என்பதை நினைக்கும்போது, நம்மவர்களுக்கு (தமிழ்நாடு) தொடர்பற்ற விழாவாகவே எனக்குத் தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. ரக்‌ஷாபந்தனை ஏத்துக்கிட்ட நம்ம மக்கள் ஹோலிப்பண்டிகையை ஏற்றுக்கொள்ளவே இல்லைன்னுதான் தோணுது. ஆனா, இந்திரவிழாவா இந்த பண்டிகை நம் முன்னோர்களால் கொண்டாடப்பட்டதுன்னும் சொல்றாங்க.

      Delete
  3. மக்களிடையே ஒற்றுமையும் நம்பிக்கையான உறவும் மலரப் பண்டிகைகள் உதவுமே!

    ReplyDelete
    Replies
    1. மனிதம் மலர பண்டிகைகள் உதவுது என்பது உண்மையே! ஆனா, பண்டிகையின் தாத்பரியம் மறைந்து ஆடம்பரமும், கொண்டாட்டமுமாய் ஆகிட்டுது. அதுதான் வருத்தமளிக்குது.

      Delete
  4. அருமை...

    இன்னைக்கு என்ன தீடிரென்று...? மதியம் மேல தானே பதிவு வரும்...!

    ReplyDelete
    Replies
    1. மீள்பதிவுதானே?! அதான் காப்பி பேஸ்ட் பண்ணி போட்டாச்சுது. ஆனா, மதியம்தான் தெரிஞ்சுது பங்குனி உத்திரம்ன்னு. இன்னிக்கு ரெண்டு பதிவா போட்டாசு. சிட்டுக்குருவிகள் தினம்ன்னு இருக்கு. நைட்டுக்கு ஒரு பதிவு போடலாமான்னு ஒரு யோசனையா இருக்கு.

      Delete
  5. ஹோலிக்கே இத்தனை கதைகளா?!!! ஹோலி சும்மா ஒரு பருவம் மாறும் சமயத்துக்கான பண்டிகை, ஜாலி நிகழ்வுனுதான் நான் அறிந்தது.....

    கூப்பிட்டு வைச்சு கன்னத்துல பூசினா பரவால்ல...சொல்லாம கொள்ளாம நம்ம முடி, உடம்பு, ட்ரெஸ்னு மேல அடிக்கறதுதான் ஒத்துவருவதில்லை...ஹா ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. படங்களில், செய்திகளில் பார்த்ததோடு சரி.

      Delete
  6. நான் பயிற்சிக்காக அம்பர்நாதில் இருந்தபொதுதான் முதலில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதை அறிந்தேன் விடியற்காலையில் எங்களறையில் பெரும்பாலோனோர் தென்னிந்தியர்கள்வலுக்கட்டாயமாக நுழைந்து கலர் பூசி வடக்கத்தியவர்கள் மகிழ்வதைக்கண்டபொதே ஹோலிப் பண்டிகை மீது ஒரு வெறுப்பு வந்து விட்டது பிற்காலத்தில் இப்பண்டிகை ஆண்களும் பெண்களும் கூடி விளையாட வாய்ப்பாகக் கருதப்படும் ஒரு விழாவாகவே அறிந்தேன் முன்னெல்லாம் காமன் விழா என்று கொண்டாடப்பட்டு வந்தது என்று அறிகிறேன்

    ReplyDelete
    Replies
    1. சிலப்பதிகாரத்தில் வரும் இந்திரவிழாவின் சாயலை ஒத்தது ஹோலி பண்டிகை

      Delete
  7. பிச்கரி - பிச்காரி!

    நாளைக்கு தான் ஹோலி. இன்றைக்கு ஹொலிகா தஹன்....

    மீள் பதிவு தானே...? ஹோலி இங்கே இப்போதெல்லாம் நான் கொண்டாடுவதில்லை! முன்பு நிறைய நண்பர்களுடன் கொண்டாடியதுண்டு!

    ReplyDelete
  8. ஹோலியைப் பற்றி ஒரு வரலாற்றையும் வைக்கல போல.....

    ReplyDelete