Friday, March 01, 2019

வழக்குகளில் வெற்றிப்பெற கரிக்ககம் சாமுண்டிதேவி , புத்தனாற்றின்கரா - புண்ணியம் தேடி ஒருபயணம்.

போனவாரம் நமது புண்ணியம் தேடி ஒருபயணம். தொடரில் சோட்டாணிக்கரை பகவதி அம்மனை பத்தி பார்த்தோம். இந்தவாரம் நாம பார்க்கபோறது திருவனந்தபுரம், பத்மநாப சுவாமி கோவிலிலிருந்து வடமேற்காக சுமார் 7 கிமீ தொலைவிலிருக்கும் பார்வதி புத்தனாற்றின் கரையில் மக்களின் குறைகளைக் கேட்டு தீர்ப்பு அளிக்கும் கண்கண்ட தெய்வமாய் குடிக்கொண்டுள்ள கரிக்ககம் சாமுண்டிதேவியை பத்திதான் இந்தவாரம் பார்க்கப்போறோம் .
சோட்டாணிக்கரை அம்மனை தரிசனம் செய்துட்டு திருவனந்தபுரம் வழியா தமிழ்நாட்டிற்குள் வந்துடலாம்ன்னு  பிளான் பண்ணி திருவனந்தபுரம் வரும்போது அங்கிருந்த ஒரு விளம்பர போர்ட் கண்ணில் பட்டது. அதில், அடுத்தமாசம் கரிக்ககம் சாமுண்டிதேவி கோவிலில் பொங்காலா வைபவம் ன்னு  அறிவிப்பு இருந்துச்சு. சரி,  இந்தக்கோவில் எங்க இருக்குன்னு கேட்டு வண்டிய அந்தப்பக்கமா திருப்பிட்டோம்.  இந்த கோவிலுக்கு   திருவனந்தபுரம் தம்பானுர் ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து கொல்லம் வழி செல்லும் பாதையில் போனால் சுமார் 7 கிமீ தொலைவில் இந்த கோவில் இருக்கு இல்லைனா ஏர்போர்ட் மெயின் ரோடு விழிஞம்  வழியா  போனால் 2 கிமீ தொலைவில் இந்தக்கோவிலுக்கு போயிடலாம். ஒருவழியாக கோவிலை கண்டுபிடித்து வந்துட்டோம். இங்கே கார் நிறுத்துவதற்கு விசாலமான இடம் இருக்கு. நல்ல அமைதியா மரங்கள் சூழ அழகாக காட்சியளிக்கிறது இந்த சாமுண்டி கோவில்.
இந்த கோவிலின் நேரே இருக்கும் ஸ்ரீகோயில்’ எனப்படும் கருவறையில் தேவி அமர்ந்த திருக்கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சி தருகிறாள். தேவிக்கு வலதுபுறத்தில் இரண்டு தனி சன்னிதிகள் எப்பொழுதும் பூட்டியே வச்சிருப்பாங்களாம். ஏன்னு கேட்டதுக்கு ஒரு சன்னதியில் உக்கிர சொரூபிணியாக   ரத்தசாமுண்டியும், மற்றொன்றில் சாந்தமும் சகல லட்சணங்களும் கொண்ட குழந்தைத் திருமுகத்தோடு பால சாமுண்டியும் அருள்பலிக்கின்றனர். ஸ்ரீகோயில் தேவியை நாம் எளிதாக தரிசனம் செய்துவிடலாமாம். ஆனா, இந்த இரு தேவியரையும் திருக்கோவில் அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி குறிப்பிட்ட சமயத்தில்தான் தரிசிக்கமுடியும். குறிப்பிட்ட சில சமயங்களில் மட்டும்தான் அந்த சன்னிதி கதவுகள் திறக்கப்படுமாம்.  காத்திருந்து, அனுமதி வாங்கி பாலசாமுண்டியை நடை திறந்து தரிசனம் செய்து பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியம் கைகூடும் என்றும், எண்ணியது எதுவானாலும் தேவி ஈடேற்றுவாள் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். வழக்கு எதிரிகள் தொல்லை, உடல்நலக்குறைவு இதற்கெல்லாம் ரத்த சாமுண்டியை நடைதிறந்து வழிபட்டால் தேவி உடனடியாக தீர்த்துவைப்பாள் என்பது நம்பிக்கை. இந்த இருநடைகளையும் பணம்கட்டி தரிசனம் செய்வதற்கு இந்தியாவிலிருந்து மட்டுமல்லாது அயல்நாட்டில் இருந்தும் பக்தர்கள் வருவதை பார்க்கமுடிந்தது .
இந்த கரிக்ககம் அம்மையை  ‘பராசக்தி’ என்றும், ‘பகவதி’ என்றும், ‘பரமேஸ்வரி’ என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர். அதேப்போல இந்த கரிக்ககம் தேவியும் சாமுண்டி தேவி, ரத்த சாமுண்டி தேவி, பால சாமுண்டி தேவி என் மூன்று வடிவங்களில் இங்கு  அருள் பாலிக்கிறாள். இந்த மூன்று தேவியர்களில் சாமுண்டி தேவிக்கு மட்டுமே சிலை வடிவம் இருக்கு. ரத்த சாமுண்டி, பால சாமுண்டி ஆகிய அம்மனின் உருவங்களை அந்தந்த சன்னதிகளில் பண்டைய சுவர் சித்திரகமாகவே இருந்து அருள்பாலிக்கின்றனர். மோசடி பேர்வழிகளால் ஏமாற்றபடுபவர்கள். காவல் நிலையங்கள், நீதிமன்றங்களில் சிலருக்கு நியாமான தீர்ப்புகள் கிடைக்காமல் இருக்கும்.அதுபோன்றவர்கள்லாம் இந்த கரிக்ககத்து அம்மனை வந்து வேண்டிக்கொண்டு செல்கின்றனர். பலரது வேண்டுகோள்கள் தீர்ந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தக்கோவிலின் காலம் பற்றிய சரியான குறிப்பு இல்லை என்றாலும், செவிவழிக்கதையாக சொல்லப்படுவது என்னான்னா சுமார் 600  ஆண்டுகளுக்கு முன், மலைநாடான கேரளாவின் மலைக்காடுகளில் வசித்துவந்த ஒரு வேதபண்டிதர் சாமுண்டி தேவியை வணங்கிவந்தாராம். அவருடன் அவரது பிரதான சீடரான  மடத்துவீடு குடும்பத்தை சேர்ந்த மூத்தவர் ஒருவரும் வணங்கி வந்தார். சில காலங்களுக்குப் பிறகு அந்த குருவும் சீடரும் இடமாற,இந்த சாமுண்டிதேவியும் அவர்களுடன் ஒரு சிறுமியின் வடிவில்  தேவி கரிக்ககம் பகுதியிலுள்ள மடத்துவீட்டுக்கு வந்துவிட்டாள் என சொல்லப்படுது .
தற்போது கோயில் அமைந்துள்ள இந்த இடத்தில் ஆரம்பத்தில்  ஒரு பந்தல் அமைத்து தேவிக்கு கோயில் உருவாக்கினர். ஆரம்பத்தில் கலைமான் கொம்பில் செய்யப்பட்ட வெள்ளியினால் ஆன முகத்துடன் கூடிய தேவியின் உருவம்தான் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம்.  பின்னர் பக்தர்கள் தேவியை விக்கிரக ரூபத்தில் தரிசிக்கவேண்டும் என ஆவல் கொண்டு, அம்மனிடம் அனுமதி கேட்க, அம்மனும் சரியென அருள் வாக்கு கொடுத்ததை தொடர்ந்து தச்சு சாஸ்திர விதிப்படி பழைய கோயிலை, அந்தப் பாரம்பரியம் மாறாமல் அமைத்து தேவியை பஞ்சலோக விக்கிரகமாக பிரதிஷ்டை செய்தார்களாம். ரத்த சாமுண்டி சந்நிதியில் தேவியின் ரௌத்திர பாவத்துடன் கூடிய பழையகாலத்து சுவர் ஓவியம் இருக்கு. இந்த திருநடையில்தான் பண்டைய காலத்தில் குற்றம் செய்தவர்கள் மற்றும் திருடர்களை கொண்டு வந்து சத்தியம் வாங்கும் நடைமுறை இருந்திருக்கிறது.ஏதேனும் பொருளை திருடு கொடுத்தவர்கள் இந்த நடைமுன் வந்து பிரார்த்தித்தால் ஒருசில நாட்களிலேயே திருட்டுப்போன பொருள் திரும்ப கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையும் உண்டு. மேலும் பிடிபட்ட திருடர்களை இங்கு அழைத்து வந்து சத்தியம் செய்ய சொல்வார்களாம். ரத்த சாமுண்டிக்கு பயந்து குற்றவாளி செய்த தவறை ஒப்புக்கொண்டு விடுவானாம். அப்படியில்லாமல் பொய் சத்தியம் செய்தால், தேவியின் ஆலயத்தைத் தாண்டி வெளியே வருவதற்குள் அவருடைய உடலில் மாற்றம் உண்டாகி துடிக்க ஆரம்பித்து விடுவார்களாம். இது கேரள மக்களின் நம்பிக்கை! 
இந்த நடையில் வந்து பொய் சொல்பவர்கள் தேவியின் கோபத்துக்கும் அதைத் தொடர்ந்து பல இன்னல்களுக்கும் ஆளாகியிருப்பது அனுபவபூர்வமான கண்கூடான உண்மை என் இங்குவந்து வழிபடுவர்கள் சொல்கிறார்கள். மேலும் இந்த கோவிலில் வந்து பிரார்த்தித்தால் தீர்க்கவே முடியாமல் சிக்கலில் இருக்கும் வழக்குகளுக்கு தீர்வும் கிடைக்கும் என்பதும் ஐதீகம். பண்டையக் காலத்தில் இந்த கரிக்ககம் சாமுண்டி கோயில் ஒரு நீதிமன்றம் போலவே செயல்பட்டு வந்திருக்கிறது. இப்போதும் சிக்கலான வழக்குகளில் தீர்வுக்காண காவல்துறை அதிகாரிகள் சிலர் வந்து தேவியை பூஜை செய்து வணங்கிவிட்டுப் போவதாகக் சொல்கிறார்கள். அடுத்தது,  பாலசாமுண்டி நடை. இங்கு வந்து பிரார்த்தித்துக்கொண்டால் குழந்தைகளின் தீராத நோய்கள் நீங்கும் என்றும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும் என்பதும் அனுபவப்பூர்வ உண்மை என இந்த திருநடையில் வந்து வழிபட்டவர்கள் சொல்லுகிறார்கள்.வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் ஆடு, கோழி, தானியம், தங்கம் போன்ற காணிக்கைகளை கோயிலுக்கு செலுத்துகிறார்கள். தேவி சந்நிதியை அடுத்து, மகாகணபதி, சாஸ்தா, யக்ஷியம்மா, புவனேஸ்வரி, ஆயிரவல்லி, குரு இல்லம், நாகர்காவு, அன்னபூர்ணேஸ்வரி ஆகிய சன்னிதிகள் இருக்கு.
இந்த கோவிலில் நடந்த அரசர்காலத்து வழக்கு ஒன்று இன்றும் செவிவழி கதையாய் பேசப்படுது. அப்பொழுது ஆண்ட  அரசியின் விலை மதிப்புமிக்க காதணி ஒன்று திருட்டு போய்விட்டதாம்.  அப்போது காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவரின்மீது சந்தேகம் கொண்டு, அவனை சிறையில் அடைத்து விட்டனர். அந்த காவலனின் காதலி அதே அரண்மனையில் அரசியின் தோழியாக இருந்தாள். அவள் அரசியிடம் ஓடிச்சென்று, நான் தான் அந்த காதணியை எடுத்தேன். அதனால் என்னை சிறையில் தள்ளி, ‘என் காதலரை விடுவித்து விடுங்கள்’ என மன்றாடினாள். காவலனோ! ‘அவளை விட்டு விடுங்கள். நான்தான் குற்றவாளி. என்னை தண்டியுங்கள்’ என்றான். குழம்பிப்போன அரசன், அமைச்சரின் ஆலோசனைப்படி கரிக்ககம் கோவிலில் ரத்த சாமுண்டி சன்னிதானத்தில் சத்தியம் செய்வித்து, உண்மையை கண்டுபிடிக்க முடிவானது. பொய் சத்தியம் செய்பவர்களுக்கு அம்மன் தண்டனை வழங்குவார் என்பது திண்ணம். காவலரும், அவரது காதலியும் ஆலயக் குளத்தில் நீராடி, ஈர உடையுடன் ரத்த சாமுண்டி சன்னிதி முன்பாக வந்து நின்றனர்
அப்போது அரசியின் துணிகளை சலவை செய்யும் பெண் ஒருத்தி, அங்கு ஓடோடி வந்தாள். சலவைக்குப் போடப்பட்ட துணியில் அரசியின் காதணி இருப்பதைக் கண்டேன். அப்போது விண்ணில் கரிக்ககம் சாமுண்டி தேவியின் வாக்கு ஒலித்தது. அதன்படி இந்த காதணியை உங்களிடம் ஒப்படைக்க வந்தேன். காவலரும், அவரது காதலியும் நிரபராதிகள். அவர்களை விடுவிக்கவேண்டும். இதோ காதணி’ எனக்கூறி மன்னனிடம் அதை சமர்ப்பித்தாள். மன்னன் தன் தவறுக்கு வருந்தினான். பின் காதணி கிடைத்ததால் மகிழ்ச்சியுற்றான். காவலரையும், அவரது காதலியையும் விடுவித்தான். அரசி தன் இரு காதணிகளையும் தேவிக்கு சமர்ப்பணம் செய்தாள். அன்றுமுதல் பண்டைய அரசர் காலத்தில் நீதியை நிலைநாட்ட இந்தச் சன்னிதானத்துக்கு வந்து சத்தியம் செய்வது ஒரு சடங்காக இருந்துவருகிறது. இப்போது பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை, சொத்துத் தகராறு, நம்பிக்கை மோசடி செய்தல், வழிப்பறி, களவு, வேலை சம்பந்தமான தடைகள் ஆகியவற்றுக்கு இந்தத் உக்கிர வடிவம் கொண்ட‘‘ரத்த சாமுண்டியை தேவி நடையைத் திறக்கச்செய்து வழிபட, நல்ல தீர்ப்பும், தீர்வும், மன நிம்மதியும் நிச்சயம். 
சாமுண்டி கோயில் ராஜக்கோபுரம் ஐந்து நிலைகளாகக் கட்டப்பட்டுள்ளது. கோபுரத்தின் மேற்பகுதியில் துர்காதேவியின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிவபுராணமும், அவதாரக் காட்சிகளும் சிற்பங்களாகக் காட்சியளிக்கின்றன. தாரகன் என்ற அசுரனை அழிக்க சிவபெருமான் பத்ரகாளியை அவதரிக்கச் செய்ததும், பத்ரகாளி அசுரனை அழிப்பதுமான சிற்பங்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆலய மண்டபத்தின் தென்பக்கம் ஸ்ரீகணபதி, வடக்குத் திசையில் சாமுண்டி, உட்புறம் பத்ரகாளி, வீரபத்ரன், ராஜ வாசலின் மேல்பக்கம் கஜலட்சுமி, ரத்த சாமுண்டியின் உக்கிர சொரூபக் காட்சி அழகு .கோயிலுக்கு வெளிப்புறம் குளமும் அதற்கு சற்றுத் தள்ளி, நாகர் வனமும் உள்ளன. பல்வேறு மருத்துவ குணமுள்ள செடிகள், ஓங்கி வளர்ந்த பெரிய மரங்கள், நாகர் சிலை கொண்ட சன்னிதி ஆகியவை நாகர் வனத்தில் இருக்கு.
அதேபோல அவரவர் ராசிக்கு ஏற்ற மரங்களை நடுவதும்,அந்த மரங்களுக்கு பரிகாரம் செய்வது எல்லாம்  நாகர்காவுவை ஒட்டி உள்ள தோட்டத்தில் இருக்கிறது .  அதுபோல பக்தர்கள் தங்கள் காணிக்கைக்காக பலிகொடுக்கும் சேவல்களும் இங்கே தனியாக கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ளன .
இந்த இடத்தின் பெயர்க்காரணம் பற்றி சொல்லும்போது ஒருகாலத்தில் இந்த இடம் திருவிதாங்கூர் மன்னனின் படையில் களரிச்சண்டை பயின்ற நிபுணர்களின், களரிக்களமாக பயன்படுத்தப்பட்டதாம். அந்த பெயரே தற்போது மருவி கரிக்ககம் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்லப்படுது.  வருடந்தோறும் பங்குனி மாதத்தில் இக்கோயிலில் 7 நாட்கள் திருவிழா நடைபெறும். நிறைவு நாளன்று பிரசித்தி பெற்ற பொங்கல் விழா நடைபெறும். இதில் பல லட்சம் பெண்கள் கலந்துக்கொண்டு இந்தக் கோயிலைச் சுற்றி சுமார் 5 கி.மீ. சுற்றளவில் பெண்கள் பொங்கலிடுவார்களாம்.
அதுபோல பால சாமுண்டி, அழகும் அமைதியுமாக அசுரவதம் முடிந்து, கோபமெல்லாம் தணிந்து சாந்த நிலையில் ஐஸ்வர்ய ரூபிணியாக இங்கே காட்சிதருகிறாள். இங்கு குழந்தைகளுக்கான பிரத்தியேக வழிபாடுகள் நடைபெறுகின்றன .நல்ல இனிப்பான பாயாசம், பட்டு உடை, முல்லைப்பூ, பிச்சிப்பூ ஆகியவற்றைக்கொண்டு, குழந்தைகள் கல்வி, தேர்வில் நல்ல மதிப்பெண், தேக ஆரோக்கியம் ஆகியவற்றுக்காக, பக்தர்கள் பூஜைகள் செய்கின்றனர். சிறுவர் சிறுமிகள் பட்டாடை உடுத்தி, பல்வேறு கடவுள் திருவுருவம் புனைந்து ஊர்வலமாகச் அழைத்து செல்லும் ‘தாலப்பொலி’ன்ற திருவிழா நடக்குமாம். அதில் கடவுள்களின் அலங்காரங்களை வேசமா போட்ட சிறுவர் ,சிறுமியரை ஊர்வலம் முடிந்து ஆலயத்திற்கு சென்று பூஜைகள் செய்வார்களாம். இது அந்த குழந்தைகளுக்கு நீண்ட ஆயுளும் ,ஆரோக்கியமும் நல்வாழ்வும் கொடுக்கும் என்பது ஐதீகம் .
காலையில் நிர்மால்ய தரிசனம் முடிந்ததும் உடனடியாக தேவிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெறுமாம். நாம்  நினைத்த காரியம் தடையின்றி நடக்கவும், சகல தோஷங்கள் அகலவும், தொடர்ந்து தேவிக்கு 13 வெள்ளிகிழமைகள் புஷ்பார்ச்சனை செய்து வழிபடுவது மிகச் சிறந்தது அல்லது கடும் பாயசம், நைவேத்யம். அர்ச்சனை, பால் பாயசம், பஞ்சாமிர்த அபிஷேகம், புடவை சார்த்தல் ஆகியவற்றாலும் வழிபாடு செய்யலாம். என  சொல்லப்படுகிறது. இங்கு மகாகணபதி சன்னிதியில் எல்லா நாட்களிலும் கணபதி ஹோமம் நடத்தப்படுது. பக்தர்கள் புதிதாக வீடு கட்டும் வேலை துவங்கும்போதும்,  வர்த்தகத்தில் புதிய முயற்சிகளின்போதும் இங்கு கணபதி ஹோமம் செய்துவிட்டே துவங்குகிறார்கள். கணபதி தவிர, சாஸ்தா, யட்சியம்மா, புவனேஸ்வரி, ஆயிரவல்லி,  அன்னபூர்ணேஸ்வரி ஆகியோரும் இங்கு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்
நேரே சென்றதும் வலப்பக்கம் திருக்கோவிலின் தெப்பக்குளம் இருக்கு. இந்த கோவிலில் இருக்கும்  மகாகணபதி சன்னிதியில் எல்லா நாட்களிலும் கணபதி ஹோமம் நடத்தப்படுது. புதிதாக வீடு கட்டும் வேலை துவங்கும்  பக்தர்கள்   வர்த்தகத்தில் புதிய முயற்சிகளின்போதும் இங்கு கணபதி ஹோமம் செய்துவிட்டே துவங்குகிறார்கள். கணபதி தவிர, சாஸ்தா, யட்சியம்மா, புவனேஸ்வரி, ஆயிரவல்லி,  அன்னபூர்ணேஸ்வரி ஆகியோரும் இங்கு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். காலையில் ஐந்து மணிக்கே நடை திறந்து விடுவார்கள் என்றாலும் ,=மற்ற இருதேவியரின் நடை திறக்க காலை 7-.15 மணி முதல் 11 மணி வரையும், பிற்பகல் 4-.45 மணி முதல் மாலை 6 மணி வரையும் இங்கு நடை திறந்து பிரார்த்தனை செய்யலாம் எனச் சொல்லப்படுது.  வழக்குகளுக்கு பேர்ப்போன இந்த கோவிலில் வருடந்தோறும் பொங்கலிடும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அடுத்தமாதம் இந்த பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. தூய்மையான மனதுடன் இந்த சாமுண்டி கோவிலுக்கு வந்து பிராத்தனை செய்தால் கண்கூடாக நிறைவேறுகிறது என்பது இங்குள்ளவர்களின் நம்பிக்கை. மீண்டும் புண்ணியம் தேடி ஒரு பயணத்தில் மற்றோரு கோவிலிருந்து உங்களை சந்திக்கிறேன் .
நன்றியுடன்
ராஜி 

13 comments:

 1. மனிதர்களின் குற்ற உணர்ச்சியை பயமுறுத்தி சாடிக்கும்தேவி போல கேரளக் கோவில்களில் கதைகள் நிறைய தேத்தலாம்

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்பா எல்லாம் உக்கிரதெய்வங்களாக தான் சித்தரிக்க படுகின்றன.

   Delete
 2. முதலில் மனிதர்களுக்கு உருவாகும் குற்றஉணர்ச்சிகள் ஏன் ஏற்படுகிறது?அவர்களுக்கு வரும் பாதிப்புகள் எல்லாம்,அவர்களது செயலாலோ,குடும்பத்தாலோ அல்லது சுற்றத்தினராலோ ஏற்படும் என்று நினைத்தால் அதுவல்ல உண்மையான.காரணம் அவர்கள் இப்போது இருக்கும் விதம்தான். இதை யார் சரிசெய்து கொள்கிறார்களோ, அவர்களுக்கு இந்த சாமுண்டிதேவி சாடிக்கும் தேவியாக தெரியாது,சாதிக்கும் தேவியாக தெரியும் ..

  ReplyDelete
 3. நமது உடலும் மனமும் கூட நமது பேச்சைக்கேட்டு நடப்பதில்லை.அப்பொழுது அது யார் இயக்கத்தில் இயங்குகிறது.இதுதான் நமது பிரச்னை.நாம் பிரச்சனையின் மூலத்தை ஆராயாமல் குற்றத்தின் பின்னனியை விரட்டி விரட்டி சென்றுகொண்டு இருக்கிறோம்.அதற்கு நாம் பலவித காரணங்களைக் கண்டுபிடிக்கிறோம்.உண்மையான விஷயத்திற்கும் தேவையற்ற குற்ற உணர்ச்சிகளை கற்பனை செய்துகொண்டு,அதை இயல்புவாழ்க்கையோடு கொண்டு செல்வதால்,அது நமக்கு உண்மையான குற்ற உணர்ச்சிகளாக மாறி,இரண்டுக்கும் வேறுபாடு தெரியாமல் விமர்சனம் செய்கிறோம் ..

  ReplyDelete
  Replies
  1. குற்றவுணர்வு மக்களில் இருந்தால்தான், அவர்களை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பது அவர்களின் எண்ணம்.அதற்காக கூட இந்தமுறைகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம் அல்லவா...

   Delete
 4. போகிற போக்கில் எந்த கோவிலையும் விடுவதில்லை போலிருக்கே...

  நலமுடன் வளமுடன் வாழ்க...

  ReplyDelete
  Replies
  1. நண்றிங்கண்ணே எனக்ககவா கோவிலுக்கு போகிறேன்?என் அண்ணன்,தம்பிகளுக்கு எல்லாம் கடவுளின் அருளாசி கிடைத்து அவங்க வாழ்க்கையில எல்லா புண்ணியமும் பெருவதற்காக தான்,நான் புண்ணியம் தேடி ஒரு பயணமே செல்கின்றேன்..அப்படியே உலகமெங்கும் சுற்றிவர ஆசைதான்,காலமும் கடவுளின் அருளும் இருந்தால் நிச்சயம் செல்வேன்ங்கண்ணே.

   Delete
 5. நம்பிக்கைகள் வாழ்க. அறியாத ஒரு கோவில் பற்றி அறிந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. நம்ம்பிக்கையே வாழ்க்கை,வாழ்கையே மனிதனுக்கு படிப்பினை,புதுப்புது படிப்பினையே வாழ்க்கையை செம்மையாக வழிநடத்தும்.அதற்க்கு புதுபுது இடங்கள்,புது புது கலாச்சாரங்கள் உதவும் ,அந்த வகையில் ஒன்றுதான்ண்ணே இந்த பயணம்...

   Delete
 6. தெய்வங்கள், கதைகள், நம்பிக்கைகள், ஒவ்வொன்றும் நம்மை எப்படியோ ஈர்த்துவிடுகின்றன. அவ்வகையில் சோட்டாணிக்கரை பகவதி அம்மன் அளவிற்கு இந்த அம்மனும் ஈர்த்துவிட்டார்.

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்கப்பா,ஏதோ என்னால் முடிந்தது கோவிலுக்கு சென்று உங்கள் அனைவருக்கும் இப்படி ஒரு கோவில் இருக்கிறது என்று சொல்வதே எனக்கு பெரும் பாக்கியம் என்று நினைக்கிறன்.

   Delete
 7. புண்ணியம் கிடைக்கட்டும்

  ReplyDelete
  Replies
  1. புண்ணியம் கிடைப்பதற்காகத்தானே கோவில் கோவிலாக யாத்திரை...கிடைத்ததா இல்லையா என்று அந்த கடவுளுக்கே வெளிச்சம்.

   Delete