புதன், ஜனவரி 29, 2014

எங்க ஊர் அரண்மனை - மௌனச்சாட்சிகள்

உள்ளுர் சாமிக்கும், உள்ளூர் ஆட்டக்காரனுக்கும் எப்பவும் மதிப்பில்லேன்னு எங்க ஊர் பக்கம் ஒரு பழமொழி இருக்கு. அதுப்போலதான் எங்கெங்கோ இருக்கும் அரண்மனை, நினைவு மண்டபங்கள், கட்டிடங்கள் பத்திலாம் பதிவா போடுறேன். ஆனா, எங்க ஊருலயும் ஒரு அரண்மனை இருக்கு. அது என் வீட்டுல இருந்து 3வது கிமீல இருக்கு. அதைப் பதிவா போடனும்ன்னு இத்தனை நாள் தோணாமலே போய்ட்டுது. என்னமோ திடீர்ன்னு ஞானோதயம் வரவே கேமராவை தூக்கிட்டு கிளம்பிட்டேன். 

வரலாற்று சிறப்புகள் இந்த கட்டிடத்தில் புதைந்திருந்தாலும், அதெல்லாம் தூக்கி சாப்பிடும் இன்னொரு சிறப்பு இந்தக் கட்டிடத்தில் இருக்கு. அது என்னன்னு பதிவோட கடைசில சொல்றேன். இப்ப சொன்னா, இப்பவே நீங்க எஸ்கேப்பிடுவீங்க. அதான். இனி பதிவுக்குள் போகலாம்...,
ஆரணி டூ செய்யாறு, காஞ்சிப்புரம், சாலையில் 5வது கிலோ மீட்டர்ல சத்திய விஜய நகரம்”ன்ற இடத்துல “ஜாகீர்தார் அரண்மனை”ன்ற பேர்ல பல்வேறு சரித்திர நிகழ்ச்சிகளைத் தாங்கி மௌனமாய், நிக்குது. மௌனமாய் நின்னாலும் பரவாயில்ல!! தன்னோட மூச்சை எப்ப வேணுமினாலும் நிறுத்திக்குவேன்னு பயமுறுத்திக்கிட்டே இடிப்பாடுகளோடு நிக்குது.

வைரமுத்து தன்னுடைய பிறந்த ஊரைப் பத்தி ஒரு கவிதையில் “என்னை வளர்த்த ஊர் என்பதன்றி அதற்கு எந்த வரலாறும் இல்லை”ன்னு சொல்லி இருக்கார். ஆனா, நான் கல்யாணம் கட்டிக்கிட்டு, வாழும் ஊரான ஆரணியை அப்படி சொல்ல முடியாது.  தொண்டை மண்டலத்தின் முக்கிய ஸ்தலமாக ஆரணி இருந்திருக்கு.


முதலாம் ராஜராஜனின் ஜெயம்கொண்ட சோழ மண்டலத்துக்கும் முந்தைய வரலாறு உண்டு இக்கோட்டைக்கு.... இந்தக் கோட்டைக்கும் சிவாஜி படையெடுப்பு, சம்புவராயம், விஜயநகரப் பேரரசு, ஆற்காடு நவாப் ஆட்சிக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு
யாரை!? எதற்காக!? ஏன்!? என உண்மை தெரியாமலேயே மருதநாயகமும் ராபர்ட் கிளைவும் ஓரணியில் நின்று, ஆங்கிலேயருக்கு கப்பம் கட்ட மறுத்த “சுபான்ராவ்” என்ற மன்னன் மீது போர் தொடுத்த வரலாற்றைக் கொண்டது இக்கோட்டை. 
இங்கு நடந்த போருக்குப் பின், ஆற்காடு நவாபின் சூழ்ச்சி புரிந்து, ஆங்கிலேயருக்கு எதிராய், ”சுபான்ராவ் மன்ன”னுடன் நட்பாகி போராட்டத்தில் இறங்கினார் மருத நாயகம். மருத நாயகத்தின் எழுச்சியை கண்டு அஞ்சிய ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி செய்து போரில் அவனை சிறைப் பிடித்தனர்.   அப்படி சிறைப்பிடிக்கப்பட்ட மருதநாயகத்தை தூக்கிலிட தீர்ப்பு வந்தது. 
கதை எங்கெங்கோ திசை மாறுகிறது. மருத நாயகத்தின் கதையை வாய்ப்பு கிடைப்பின் பிறிதொரு பதிவில் பார்க்கலாம்.

மருத நாயகத்தை தூக்கிலிடும்போது அவரின் உயிர் பிரியாமல் இரண்டு முறை கயிறு அறுந்து விழுந்தது. நான் யோகக்கலையை கற்றவன், நீண்ட நேரம் கழுத்தை உப்ப வைத்து என்னால் தூக்கிலிருந்து மீள முடியும்ன்னு மருத நாயகத்தின் பேச்சைக் கேட்ட ஆங்கிலேயர்கள் முன்னிலும் வலுவான கயிற்றைக் கொண்டு நீண்ட நேரம் தூக்கிலிட்டு மருதநாயகத்தை கொன்றார்கள். 

அன்றிரவு மருதநாயகம் பழி தீர்க்கப்போவதாய் எச்சரிப்பதுப் போல ஆங்கிலேய கவர்னர் கனவு கண்டதைத் தொடர்ந்துப் புதைக்கப்பட்ட அவரின் உடலை தோண்டி எடுத்து ஒவ்வொரு பாகமாய் வெட்டி எடுத்து ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு பாகமாய் வீசினர். அப்படி வீசப்பட்ட மருதநாயகத்தின் இடது கால் கிடைக்கப்பட்ட சுபான்ராவ் மன்னன் தன் நண்பனுக்காய் கட்டிய கல்லறையின் வாயிலைதான் மேல் படத்தில் காண்பது. 
மேல் படத்தில் இருப்பது பல்வேறு சட்டம், வழக்குகளைச் சந்தித்த ராஜ தர்பார். இன்று, சீந்துவார் இன்றி புதர் மண்டிப் போய் இருக்கு. அந்த ராஜ தர்பார் சுவத்தில் இந்த அரண்மனையில் நடந்த அணிவகுப்புகள், ஆங்கிலேயர் வருகை, மன்னர் குடும்பத்தின் புகைப்படங்கள் இருக்கு. உள்ளப் போய் படமெடுக்கலாம்ன்னு பார்த்தா பெரிய பாம்பு புத்து இருப்பதால உள்ள போக விடலை கூட வந்த என் தம்பி! ஆனா, தெரிந்தவர்கள் வீட்டில் படங்கள் இருக்கு. நான் கொண்டு வந்து தரேன்னு சொல்லி இருக்கான். 

மேல படத்தில் நாம பார்க்குறது மன்னர் குலப் பெண்கள் தங்கிய அந்தப்புரம். கட்டிடத்திற்குள் மரவேலைப்பாடுகளால் ஆன படிக்கட்டுகள், நாற்காலிகள், சுவர் அலங்காரங்கள் இருப்பதைப் பார்த்து பிரம்மித்ததுண்டு. ஆனா, இப்ப!? 
மன்னர், அரசி,மந்திரி, வேலையாட்கள், விருந்தினர்களின் பசியாற்றிய சமையற்கூடமும், உணவருந்தும் கூடமும் இப்ப கரையான், பாம்பு, சமூக விரோதிகளின் பசிக்கு இரையாகிக் கொண்டு....,
விஜய நகர சிற்றரசனான ஜாகீர்தார் ஆங்கிலேயர் படையெடுப்பில் தோல்வி அடைந்து, அவனின் அழகான இளம் மகளை பெண்டாள வந்த ஆங்கிலேய சிப்பாய்களின் கைக்கு அகப்படாமல், தன்னை மாய்த்துக்கொள்ளும் முன் ”இளவரசி விருதாம்பாள்” தானும், தன் குலம் மட்டுமில்லாமல் இந்த ராஜ்ஜியத்தின் ஒரு உயிரும், ஒரு சிறு துரும்பும் உங்கள் கைக்கு சிக்காது”ன்னு சபதம் கொண்டதோடு, அங்கிருந்த பொக்கிஷத்தையெல்லாம் மறைத்துவிட்டு,வேலைக்காரர்கள், மந்திரி குடும்பத்தோடு தீவைத்து கொளுத்திக் கொண்டாளாம்.

கன்னித்தெய்வமான அவள் எரிந்த பாவம்தான் இந்த அரண்மனை இப்படி பாழ்படுவதற்கு காரணம்ன்னு எங்க ஊரு பெருசுகள் சொல்வாங்க.  
ஜாகீர்தார் மன்னரின் வாளையும்,  பொக்கிஷத்தையும் தேடி ஆங்கிலேயர் இக்கோட்டையை சிதைத்தனர். மீதியை நம்மாளுங்க புதையலை தேடி சிதைத்துக் கொண்டிருக்கின்றனர். அதனாலயே, இளவரசி, மன்னர் ஆவி சுத்துதுன்னு சொல்லிச் சொல்லி பொதுமக்களை இந்தப் பக்கம் வராமல் பார்த்துக்குறாங்க.
மந்திரிப் பிரதானிகள் தங்கிய தொகுப்பு வீடுகள். ஓரளவுக்கு இடிபாடுகள் இல்லாமல், புதரில்லாம பார்வைக்கு தகுந்த மாதிரி இந்த இடம் மட்டும்தான் இருக்கு. இங்கு அரசு இஞ்சினியர் கல்லூரி சில வருடம் செயல்பட்டது. இப்ப வேறிடத்தில் மாத்திட்டாங்க. அரசு அலுவலகம் போர்டே இல்லாம இயங்குது.
எவ்வளவு முயன்றும், இந்த அரண்மனை எப்பொழுது!? யாரால் கட்டப்பட்டது!? மன்னர்களின் வரலாற்றை முழுமையாய் தெரிஞ்சுக்க முடியலை. இதுவரை இக்கோட்டையின் வரலாற்று சிறப்புகளைப் பார்த்தோம்.  இனி இக்கோட்டைக்கும் ராஜிக்கும் இருக்கும் தொடர்பு என்னன்னு பார்க்கலாமா!? 

  அது என்னன்னா!?
.
..
.
நானும் என் வீட்டுக்காரரும் முதன் முதலா அவுட்டிங் போன இடம் இதான். சும்மா இல்லீங்க சகோஸ், மச்சினர், நாத்தனார், மூத்தார் குழந்தைங்கன்னு ஒரு 14 பேர் கூட கட்டுச்சோறு கட்டிக்கிட்டு போன இடம்தான் இந்த அரண்மனை. உன்னைக் கட்டிக்கிட்ட பின் என் வாழ்க்கை இப்படிதான்னு சிம்பாலிக்கா சொல்ல கூட்டிப் போனாரோ என்னமோ!!??
நீ அந்த அரண்மனைக்குள் போனே இல்லம்மா! அதான் இடிஞ்சு உருப்படாமப் போச்சுன்னு என் பசங்க சொல்வாங்க. அப்பு சின்ன பிள்ளையா இருந்தப்போ (இப்ப அவன் பெரிய மனுஷனான்னு கேட்டுடாதீங்க. அவனுக்கு கோவம் வரும். சார், 9 வகுப்பு படிக்குறார்.) ஹேர் கட் பண்ண கூட்டி போனா, அவன் அழுகையை நிறுத்த ஒரு ஃபைவ் ஸ்டார் சாக்லேட்டும், இங்கிருந்த மான்களைக் காட்டிட்டுதான் வீட்டுக்கு கூட்டி வருவார் என் அப்பா. அந்த மான்கள், இப்ப எந்த அதிகாரிக்கு பிரியாணி ஆனதோ!?

ஒரு சாம்ராஜ்ஜியத்தின் வரலாறும், அங்கு வாழ்ந்த மன்னனைப் பற்றியும் அங்கிருக்கும் மக்களுக்குக் கூட செவி வழியாய் கூட தெரிஞ்சுக்காததை நினைக்கும்போது அசிங்கமா இருக்கு...., இனி, எப்படியாவது தெரிஞ்சுக்கனும்ன்ற ஆவலோடுதான் வந்திருக்கேன். இந்த அரண்மனைப் பற்றிய விரிவான பதிவு கண்டிப்பாய் விரைவில் வரும். 

மீண்டும் அடுத்த வாரம் வேற இடத்திலிருந்து மௌனச்சாட்சிகளுக்காய் சந்திப்போம்.

49 கருத்துகள்:

 1. அரசி பொக்கிஷங்களை மறைச்சு வெச்சாளா? ஆவி நடமாடுதுன்னு சொல்லி யாரையும் வரவிடாம செய்றாங்களா? அழகா ஒரு நாவலுக்குள்ள கரு இதுல புதைஞ்சிருக்கும்மா..... பல சமயங்கள்ல நம்ம பக்கத்துல இருக்கற பொருளோட மதிப்பு நமக்குத் தெரியறதில்லை. அதுமாதிரி உனக்கு வெகு அருகில் இருக்கற இந்தக் கோட்டை பதிவு வரிசைல தாமதமா வந்திருக்குது. ஆனாலும் தகவல்கள் + படங்களோட நிறைவா வந்திருக்குது. கான்சாகிப் மருதநாயகம் உடலை தான் பயங்கரக் கனவு கண்டதன் பயனா வெள்ளைக்காரன் துண்டாடி வெவ்வேற இடங்கள்ல புதைச்ச சரித்திர உண்மை எனக்குத தெரியும். அவர் உடலோட ஒரு பகுதி இங்க கல்லறையா மாறியிருக்கறது இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். உங்க ஏரியா வர்றப்ப அவசியம் பாத்தாகணும்மா...! (சொல்லிட்டே இருங்க, வந்துராதீங்கன்னு பல்லை நறநறக்கறது இங்க கேக்குது. ஹி... ஹி....!)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் ஒண்ணுமே சொல்லல. இனியாக்கிட்ட போன் போட்டு கொடுக்குறேன். அவக்கிட்டயே பேசிக்கோங்க. இந்த வருச கோடை விடுமுறைக்கு அவசியம் வாங்கண்ணா! வந்து பசங்களோடு இருந்தும், தங்கச்சி சமையலை!! சாப்பிட்டும் போகலாம்! வழக்கம் போல ஆவி, ஸ்பை, ரூபக், சீனு, அரசன்லாம் கூட்டிட்டு வந்துடாதீங்க. நான் டென்ஷனாகி ஹோட்டல்ல இருந்து சாப்பாடு வாங்கி வந்துடுவேன்

   நீக்கு
 2. ஆரணி வந்தா மறக்காமா கூட்டிட்டு போங்க சகோ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பாய் கூட்டிப் போறேன் சகோ!

   நீக்கு
 3. எத்தனை படங்களில் மதுரை திருமலை நாயக்கர் மகாலைப் பார்க்கிறோம் ?எங்கிருந்தெல்லாம் வந்து பார்த்து செல்கிறார்கள் ?ஆனால் ,நான் உள்ளே சென்றதில்லை !நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் அந்த பகுதியில்தான் .சின்ன வயதில் பராமரிப்பு ஏதுமின்றி இருந்த போதெல்லாம் மகாலின் வளாகத்தின் உள்ளே உள்ள பின்புற மைதானத்தில் விளையாடி வளர்ந்தேன் ,
  இப்போது அழகாய் பராமரிக்கிறார்கள் ,இங்கேதானே இருக்கிறோம் ,பார்த்துக்கலாம் என்று நாள் கடந்துக் கொண்டிருக்கிறது !
  த ம 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாம போகததால்தான் சமூக விரோதிகள் அந்த இடத்தையெல்லாம் பாழ் பண்றாங்க

   நீக்கு
 4. இப்படி ஒரு அரண்மனை இருக்கா கூகுல்ல கூட தகவல் இல்ல ..புரதான சின்னங்களை வழக்கம் போல நம் அரசு பாழடைய போட்டுவிட்டது ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிஜம்தானுங்க அமிர்தா! பக்கத்து மாநிலத்து அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளைக்கூட நம்ம தமிழக அரசுகள் எடுக்க தவறியதன் விளைவு பல வரலாற்று சின்னங்கள் மண்ணுக்கடியில்...,

   நீக்கு
 5. நல்ல தகவல் எல்லாம் எழுதிவிட்டு அது என்ன அண்ணனை மட்டும் அழைப்பது நாத்தனாரை மறந்துட்டிங்க ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அண்ணா வந்தால் சீர் கொண்டு வருவார். நாத்தனார் வந்தால் சீர் கேப்பியே! அதான் கழட்டி விட்டுட்டேன்!

   நீக்கு
 6. இந்த அரண்மனை பற்றிய பதிவு மிக அருமை. நானும் இந்த ஊர்காரன் தான். நானும் என் மனைவியும் முதன் முதலா அவுட்டிங் போன இடமும் இதான். இன்னக்கி அரண்மனை இருக்கிற நிலையில் சுத்தி பார்க்கிற எண்ணம் யாருக்கும் வராது. இந்நிலை மாற்றப்படும?.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரசு கண்பட்டு மிச்சம் இருக்கும் இடத்தையாவது பாதுகாக்குறாங்களான்னு பார்க்கலாம்!!

   நீக்கு
 7. மருதநாயகத்தின் கதையை கமலஹாசன் தங்களிடம் தான் வந்து தெரிந்து கொண்டதாக ஒரு வதந்தி உலா வருகிறதே, அது உண்மைதானா சகோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிஜம்தான் சகோ! ஆனா, இதை யார்கிட்டயும் சொல்லாதீங்க. உங்க மனசோடவே வச்சுக்கோங்க.

   நீக்கு
 8. இந்த பதிவிலுள்ள படங்களைப் பார்க்கும் போது நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தில் வரும் பழைய அரண்மனையும், கிளைமாக்ஸ் காட்சியில் துப்பாக்கியோடு பயரங்கமாக சிரிக்கும் நம்பியாரும் ஞாபகம் வந்தனர். நீங்கள் படம் எடுத்த போது எந்த நம்பியாரும் வரவில்லையா? பகிர்விற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்பியாரைப் பார்த்து பயந்தக் காலமெல்லாம் மலையேறிட்டுது! இப்பலாம் நான் பயப்படுறது என் பையனுக்குதான்

   நீக்கு
 9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 10. உன்ன ராணி மாதிரி வச்சுக்குவேன்னு சிம்பாலிக்கா சொல்றதுக்காக தான் அங்க அவுட்டிங் கூட்டீட்டு போயிருக்கலாம்னு நினை தங்கச்சி

  பதிலளிநீக்கு
 11. ஊரின் சிறப்புகளை சொல்வதற்கு தான் என்னவொரு மகிழ்ச்சி... படங்களுடன் விளக்கத்திற்கு நன்றி...

  பொய் சொல்லக் கூடாது - முடிவில் என் அப்படி...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அண்ணா! உங்கக்கிட்டலாம் பொய் சொல்வேனா!?

   நீக்கு
 12. உங்களைப் பார்த்து பொறாமையாவும் பெருமையாவும் இருக்கு..பொய் இடங்களைப் பார்த்து பட்னகளும் எடுத்து அழகாகப் பதிவு செய்துட்டீங்களே..வாழ்த்துகள் ராஜி!
  ஆனால் ஏன் தான் இப்படி நம்ம ஊருல வரலாற்று சிறப்பு மிக்க இடங்களைக் கண்டுக்க மாற்றாங்கனு தெர்ல..அமெரிக்காவில் ஒரு சிறு இடத்திற்கும் நன்கு கதை சொல்லி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறார்கள்....நம்ம ஊருல இதவிட சிறப்பா எவ்ளோ இருக்கு..ஒண்ணுமே பண்ண மாற்றாங்கலேனு நானும் என் கணவரும் வருத்தப்பட்டிருக்கிறோம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிஜம்தான் கிரேஸ். மைசூர் அரண்மனையும், பத்மனாபபுரம் அரண்மனையையும் கூட அந்த மாநிலத்து அரசாங்கம் காப்பாற்றி வருது. ஆனா, நம்மூர் அரசு!?

   நீக்கு
  2. இதைப் பாதுகாத்து சுற்றுலத்தலமாக்க இணையத்தில் கையெழுத்துப் பிரசாரம் செய்யலாமா? எப்படி செயல்படுத்துவதென்று பார்க்கவேண்டும்.

   நீக்கு
 13. எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை! மிகச் சிறப்பான பதிவு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோ!

   நீக்கு
 14. சமூக அக்கறையுள்ள, பாராட்டக்கூடிய முயற்சி. ஒருவேளை, உங்க புண்ணியத்தில் இந்த அரண்மனைக்கு விடிவு வந்தாலும் வரலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படி வந்தால் நல்லதுதானே! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

   நீக்கு

 15. வரலாற்று ஆசிரியரே உங்களின் ஆராய்சிகளும் பதிவும் படமும் மிக அருமை

  பதிலளிநீக்கு
 16. பாழடைந்த அரண்மனையைப் பார்க்கும்போது கண்ணீர் வருவதைத் தடுக்கமுடியலை ராஜி..

  சரித்திர சம்பந்தமுள்ள பொருட்களையும் இடங்களையும் காப்பாற்ற நம்ம அரசுக்கும் மனமில்லை. மக்களுக்கும் அதன் அருமை தெரியவில்லை:(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிஜம்தான் அம்மா! படங்களைப் பார்த்த உங்களுக்கே மனசு கேக்கலைன்னா, அந்த அரண்மனைக்கு 20 வருசத்துக்கு முன் போய் ஓரளாவுக்கு நல்ல நிலையில் இருந்த கட்டிடத்தை பார்த்து வந்த எனக்கெப்படி இருக்கும்.

   நீக்கு
 17. Excellent pictures & story. I wonder why our Govt. did not undertake this as a historical monument and protect.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதைவிட முக்கியமான வேலைகள்லாம் நம்ம அரசாங்கத்துக்கு இருக்கு, அதான் இவற்றையெல்லாம் கண்டுக்கிடல

   நீக்கு
 18. அட..இம்புட்டு சிறப்பு வாய்ந்த அரண்மனையை இன்னுமா அரசாங்கம் கண்டுக்காமல் இருக்கிறது ?

  ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இத்தனை சிறப்புகளையும் எங்கயும் பகிராம விட்டுட்டாங்க நம்ம முன்னோர்கள். அதான் நமக்கு தெரியல

   நீக்கு
 19. சிறப்பான ஒரு இடம் எப்படி அழிந்து கிடக்கிறது.... மனதில் வலி.....

  பார்க்கணும் எனத் தோன்றுகிறது. ஆரணி வரத்தான் போறேன் ஒரு நாள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பாய் வாங்கண்ணா! வரும்போது உங்க கேமராவைக் கொண்டு வாங்க. அதுக்கு நல்ல தீனி கிடைக்கும் இங்கு.

   நீக்கு
 20. தகவல்களும், படங்களும் அருமை... பாழடைந்த அரண்மணையை பார்க்கும் போது மனம் கலங்குது....

  மருதநாயகம் வில்லன் தான் போல... யூசுப்கான் என்பவரும் இவர் தான் என நினைக்கிறேன்... அடுத்த பதிவையும் விரைவில் எதிர்பார்க்கிறேன்.. இன்னும் சில தகவல்களோடு...

  கடைசி சொன்ன விஷயம்.....:))) நாங்க முதன் முதல்ல போனது கல்லணைக்கு....:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மருதநாயகம் வில்லன் இல்லைங்க ஆதி, சில காலம் எடுப்பார் கைப்பிள்ளையாய் இருந்தவர்.

   பேசாம முதன் முதலாய் அவுட்டிங் போன இடம் பற்றி தொடர்பதிவாக்கிடலாமா!?

   நீக்கு
 21. ஒரு முறை ஆரணி வந்துதான்
  ஆகவேண்டும் போல இருக்கு
  அரண்மனையைப் பார்க்க இல்லையென்றாலும்
  பல்திறன் கொண்ட சிறந்த திறமையான பதிவரைச்
  சந்தித்துப் பேசவேண்டும் என்பதற்காகவேணும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பாய் வாங்கப்பா! வரும்போது மறக்காம மகளுக்கு சீர் கொண்டு வாங்க!

   நீக்கு
 22. OMG! Sounds like a thriller novel. Why is this place abandoned in the first place? No one to claim on the property? please do continue this series. Would love to read it. Excellent writing btw :)

  பதிலளிநீக்கு
 23. நம்மூருக்குப் பக்கத்திலே இப்படி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க அரண்மனையா? புது தகவலா இருக்கு. உங்களின் உழைப்பும் ஆர்வமும் பிரமிக்க வைக்கிறது. நம் ஊரில்தான் இப்படி புராதனமான அடையாளங்களை அழிக்கவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆரணியில் கூட இன்னொரு கோட்டை இருக்குன்னு சொல்றாங்க. ஆனா, நான் இன்னும் போனதில்ல. விவரம் கேட்டிருக்கேன். தெரிஞ்சதும் அதையும் பதிவாக்குறேன்

   நீக்கு
 24. இந்த அரண்மனையின் அழகாக முப்பது வருஷத்துக்கு முன்பு வரை ஒரளவு நன்றாகத்தான் இருந்தது கவனிபாரற்று பராமறிக்காது போனதால் மரம் செடி வளர்ந்து அழிந்து வருகிறது இதனுள் இராணிமகால் சுழல் மெத்தை இதில் மேல் ஏறி பார்த்திருக்கிறேன் அருமையாக படங்களையும் வரலாறும் சிறப்பா வழங்கியவிதம் அருமை நன்றி

  பதிலளிநீக்கு
 25. இந்த அரண்மனையின் அழகாக முப்பது வருஷத்துக்கு முன்பு வரை ஒரளவு நன்றாகத்தான் இருந்தது கவனிபாரற்று பராமறிக்காது போனதால் மரம் செடி வளர்ந்து அழிந்து வருகிறது இதனுள் இராணிமகால் சுழல் மெத்தை இதில் மேல் ஏறி பார்த்திருக்கிறேன் அருமையாக படங்களையும் வரலாறும் சிறப்பா வழங்கியவிதம் அருமை நன்றி

  பதிலளிநீக்கு