Friday, January 24, 2014

அருள்மிகு ரவீஸ்வரர் திருக்கோயில் வியாசர்பாடி - புண்ணியம் தேடி ஒரு பயணம்

புண்ணியம் தேடிப் போறப்  பயணத்துல இன்னைக்கு நாம பார்க்கப் போறது சென்னை வியாசர்பாடியில் உள்ள அருள்மிகு ரவீஸ்வரர் திருக்கோயில்.

சென்னை கோயம்பேடுல இல்ல எக்மோர்ல இருந்து போனால் வியாசர்பாடி மார்க்கெட் இல்ல அம்பேத்கர் காலேஜ்ல இறங்கினா அங்கிருந்து நடந்து செல்லும் தொலைவில் தான் இருக்கு இந்தத் திருக்கோவில். வாங்க இப்ப கோவிலுக்குள் போலாம் .

பதினென் புராணங்களையும், வேதங்களையும் இயற்றிய வேதவியாசர் அவர் வழிபட்ட தலம் இது. எனவே இத்தலம் அவரது பெயரால், "வியாசர்பாடி' எனப்பெயர் பெற்றது. பானுபுரம்பானுமாபுரி பட்டணம் என்பதுதான் வியாசர்பாடியின் பழமையான பெயர்.  பழையக் காலத்தில்  வயல்கள், ஏரிகள், மரங்கள் நிறைந்த பசுமையான வெளியில்தான் இந்த திருக்கோவில் இருந்ததாம். இங்கிருந்து பக்கத்தில் 3 கி.மீ தொலைவில் கடற்கரை என இயற்கை வளம் சூழ்ந்து காணப்பட்டதாம் இந்த திருக்கோவில். ஆனால் இன்று காற்று கூடப் புகமுடியாத அளவு கட்டிடங்கள் மக்கள் நெருக்கம் நிறைந்து இருக்கு இந்த இடம் .

இதுதான் ராஜகோபுரம். இங்க குடிக்கொண்டு அருளும் வியாச முனிவரிடம் ஆசிப் பெற்றப் பிறகே குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் இப்பகுதி மக்கள்.  பௌர்ணமியன்று இவருக்கு வில்வமாலை அணிவித்து, வழிபட கலைத்துறையில் சாதிக்கும் வல்லமை கிடைக்கும்.  தை மாதத்தில் ரத சப்தமியன்று, வியாசர் இங்க ரவீஸ்வரரை பூஜிக்கிறார் என்பது ஒரு ஐதீகம்.

ராஜகோபுரத்தின் வழியே உள்ளே நுழைந்தால் கொடிமரமும், அதன் பின்னே பலிபீடமும், அதற்கு முன்னே நந்தியும் இருக்கு. மூலவர் கிழக்கு நோக்கிய ஆவுடையார் திருகோலம். ஆனால் தரிசனத்துக்கு தெற்கு வழியாகத்தான் சென்றுதான் இவரைத் தரிசிக்க முடியும். நந்திக்கு முன்னே சுவரில், சிவலிங்கம் போன்ற அமைப்பில் துளை அமைத்துள்ளனர். தினமும் காலையில் சூரியனின் ஒளி, சிவலிங்க வடிவ துளையின் வழியாக, சுவாமியின் மீது விழுகிறது. தினமும் இங்கு சூரியனே, முதலில் சிவனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். இதன் பின்புதான் காலசந்தி பூஜை செய்கின்றனராம்.

இதுதான் திருக்கோவிலின் கொடிமரம். இனி இந்த கோவிலின் ஸ்தல வரலாறை பாப்போம்...., சூரியபகவானின் மனைவியான சமுக்ஞா தேவி, கணவரது உக்கிரம் தாங்காமல், தனது நிழல் வடிவை பெண்ணாக்கி, குதிரையாய் மாறி கானகத்தில் தவமிருக்க செல்கிறாள்.சாயாதேவி (நிழல்) எனப்பட்ட அவள், சமுக்ஞாதேவியின் பிள்ளைகளிடம் பாரபட்சமாக நடந்து கொண்டாள். 

இதை அறிந்த சூரியன் அவளிடம் கேட்டபோது, சமுக்ஞாதேவி தன்னை பிரிந்து சென்றதை தாமதமாய் அறிந்த சூரியன் தன்னோடு வாழ்வது சமிக்ஞா அல்ல சாயா என்கிற மாயப் பெண் என்று உடனே கோபம் கொண்டு தன் மனைவியைத் தேடி புறப்பட்ட சூரியன், வழியில் பிரம்மனைக் காண்கிறான். கடுமையான சினத்தோடு அலையும் ஆதவன், படைப்புத் தலைவனுக்குத் தர வேண்டிய மரியாதையைத் தர மறக்கிறான். ஆதவனின் அலட்சியம் பிரம்மனின் கோபத்தைத் தூண்ட, ‘‘மனிதனாய் பூமியில் அலைந்து… சித்தம் தெளிந்த பின் தேவலோகம் வா’’ என சாபமிடுகிறார்.

ஸ்தல அமைப்பைத் தொடர்ந்து பார்க்கலாம். தென்திசையில் உள்ள இந்த  வாசல் வழியாக உள்ளே நுழைந்துதான் மூலவரை தரிசிக்க முடியும். வாங்க உள்ளே போகலாம். இனி திருக்கோவிலின் வரலாற்றை தொடர்ந்து  பாப்போம்.  சாபம் பெற்ற சூரியன் சாபம் நீங்கி, மீண்டும் தேவராவது எப்படி!? எனக் கலங்கி நின்றான்.  இந்தச் சமயத்தில் நாரதர் வந்து பூலோகம் சென்று ஒரு வன்னி மரத்தடியில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, பூஜித்து வா. நீ இழந்த தேவ அந்தஸ்து திரும்ப கிடைக்கும் என்றார்.  நாரதரின் ஆலோசனைப்படி பூலோகம் வந்து இத்தலத்தில் ஒரு வன்னி மரத்தடியில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவனை வழிபட்டார். 

அவருக்கு காட்சி தந்த சிவன், சாபவிமோசனம் கொடுத்தருளினார். சூரியன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சூரியனின் வேண்டுதலுக்காக சிவன், அந்த லிங்கத்தில் ஐக்கியமானார். சூரியனுக்கு விமோசனம் கொடுத்தவர் என்பதால், அவரது பெயரிலேயே "ரவீஸ்வரர்' என்றும் பெயர் பெற்றாராம் ஆதவன் அரனின் அருள் பெற்ற தலமிது ஓம் பானவே நமஹஎன்று ஆதவனை ஆராதிக்கும் மந்திரம் ஒன்றும் உண்டு. இந்தத் தலமும் பானுபுரமானது.
இதுதான் மூலவர் சன்னதிக்கு மேலேயுள்ள இந்திர விமானம்.  நடுவில் எவ்வித பிடிமானமும் இல்லாமல் கூடு போன்று கட்டப்பட்டிருக்கிறது. சிவன் மூலஸ்தானத்திலிருந்து பார்த்தால், இந்த அமைப்பு தெரியும். உச்சி காலப்பொழுதில் இந்த சன்னதியில் மூலவர் மேல் சூரியன் தன்னுடைய் உஷ்ண கதிர்களால் ஆரதிக்கிறான் என்பது ஐதீகம். ஏனெனில் அந்த சமயத்தில் மூலவர் மிகவும் உஷ்ணமாக காணப்படுவாராம். சிவன் சன்னதி முன்மண்டபத்தில் சூரியனும், சந்திரனும் இருக்கின்றனர்  

ஞாயிற்றுக்கிழமை, உத்தராயண, தெட்சிணாயண புண்ணிய கால துவக்கம், மகரசங்கராந்தி (தைப்பொங்கல்), ரதசப்தமி ஆகிய நாட்களில் சிவன் மற்றும் சூரியன் இருவருக்கும் விசேஷ அபிஷேக, பூஜைகள் நடக்கிறது. ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் சிவன், சூரியனுக்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

இது மூலவர் கோபுரமும், ராஜக்கோபுரமும் ஒரே நேர்க்கோட்டில் தெரியும் காட்சி.  மேலும்  இங்க துவாரபாலகர்களுக்கு பதிலாக விநாயகரும் , சுப்ரமணியரும் இருக்கின்றனர்.  உத்தராயணம் தட்சிணாயண காலங்களில் ஒரு சிறப்பு உண்டு 'உத்தர்' என்றால் வடமொழியில் வடக்கு என்று பொருள். 'அயனம்' என்றால் வழி என்று பொருளாகும். சூரிய பகவான் தென்திசையிலிருந்து, வடதிசை நோக்கி பயணம் செய்யும் காலமே உத்தராயணம் எனப்படும். தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்களும் உத்தராயண காலமாகும் இந்த காலங்களில் சூரியன் துவாரபாலகர்களாய் நிற்கும் வினாயகபெருமான் பக்கமாக வந்து மூலவரை வழிபடுவாராம் 'தட்சண்' என்றால் வடமொழியில் தெற்கு என்று பொருள். 'அயனம்' என்றால் வழி. அதாவது சூரிய பகவான் வடதிசையிலிருந்து தென்திசை நோக்கி பயணம் செல்லும் காலமே தட்சிணாயன காலமாகும். ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஆறு மாதங்கள் தட்சிணாயன காலமாகும்.இந்த தட்சிணாயன காலத்தில் சூரியன் சுப்ரமணியரின் பக்கமாக வந்து மூலவரை வழிபடுவாராம்.
  
இதுதான் தாயார் சன்னதி கோபுரம்.  தாயார் பெயர் மரகதாம்பாள். முற்காலத்தில் இங்கு சிவன் சன்னதி மட்டும் இருந்ததாம். இப்பகுதியை ஆண்ட வீச்சாவரன் என்னும் மன்னனுக்கு புத்திரப்பேறு இல்லை. ஆகையால் புத்திரபாக்கியம் வேண்டி  சிவனை வேண்டினான். சிவன் அம்பிகையிடம் மன்னனின் மகளாகப் பிறக்கும்படி அருளினார். அதன்படி, மன்னனின் அரண்மனை நந்தவனத்திலுள்ள ஒரு மகிழ மரத்தினடியில் அம்பிகை குழந்தை வடிவில் தவழ்ந்தாள். அவளைக் கண்ட மன்னன் மரகதாம்பிகை என பெயர் சூட்டி வளர்த்தான். அவளும் இத்தலத்து இறைவன் மீது பக்தி கொண்டாள்.

 அவளது திருமண வயதில் சிவன், அவளை மணந்து, தன்னுடன் ஐக்கியப்படுத்திக்கொண்டாராம்.  இதன் பின்பு, இங்கு அம்பிகைக்கு சன்னதி எழுப்பப்பட்டது.  சிவன் அம்பிகையை திருமணம் செய்த வைபவம் ஆனி மாத பிரம்மோற் ஸவத்தின்போது நடக்கிறது. தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி அருளும் அம்பிகை, திருமண பாக்கியம் தருபவளாக அருளுகிறாள். நவராத்திரி விழா இவளுக்கு 10 நாட்கள் எடுக்கின்றனர். இவ்விழாவின் பத்தாம் நாளில் "மகிஷன் வதம்' வைபவம் நடக்கும். அப்போது அம்பாள் சன்னதி எதிரில் ஒரு வாழை மரம் கட்டி, (வாழை மரத்தின் வடிவில் மகிஷன் இருப்பதாகக் கருதி), அதில் வன்னி இலையையும் சேர்த்துக்கட்டிவிட்டு, அம்பாள் சார்பாக வெட்டி விடுகின்றனர். இந்த வைபவம் இங்கு விசேஷமாக நடக்கும்.

இனி, வெளிபிரகாரம் செல்வோம்.  இங்க முதலில் இருப்பது பக்த ஆஞ்சநேயர் சன்னதி. வெளிப்புற பிரகாரம் சுற்றி வந்து கொண்டே பானுபுரம் எப்படி வியாசர்பாடி ஆனதுன்னு பாப்போம்.

 மீனவப் பெண்ணின் மகனாய் வந்து, வேதங்களை வகுத்தளித்தவர், வியாசர். இவரது தந்தை பராசர முனிவர். வியாசரின் இயற்பெயர் கிருஷ்ணதுவைபாயனர். கலியுகத்தில் மனிதனுடைய அறிவாற்றல் குறைந்து, வேதத்தின்படியான வாழ்க்கை மறையத் தொடங்கும். உலகம் அதர்மத்தால் அவதிப்படும். எதற்காக இந்த பூமிக்கு வந்தோம் என்பதையே மனிதன் மறந்து, அறியாமையில் மூழ்கி கிடக்கும்படியாகிவிடும். இதை எல்லாம் மீறி மக்களுக்கு ஆன்ம விடுதலையில் வேட்கை ஏற்படுத்த வேதத்தை காக்க வேண்டியது அவசியம் என உணர்கிறார் வியாசர் .

இது அறுபத்திமூவர் சன்னதி. அவர்களையும் தொழுதுவிட்டு மீண்டும் வியாசர்பாடி கதைக்கு வருவோம். வேதத்தை நான்காக வகுத்து, ரிக் வேதத்தை சுமந்து மகரிஷிக்கும் யஜூர் வேதத்தை வைசம்பாயணருக்கும் சாம வேதத்தை ஜைமினி முனிவருக்கும், அதர்வண வேதத்தை பைலருக்கும் உபதேசித்தார். வேத விஷயங்களை சுவைபட மாற்றி, பதினெட்டு புராணங்களாகவும், மகாபாரதமாகவும் சமைத்தார். பிரம்ம சூத்திரத்திரம் படைத்தார். பக்தி ரசம் சொட்டும் ஸ்ரீமத் பாகவதத்தை தம் மகன் சுகப் பிரம்மரிஷி மூலமாக மனித சமுதாயத்திற்கு அளித்தார்.

அறுபத்திமூவரை தொடர்ந்து வெளிபிரகார மண்டபத்தில் அஷ்ட லக்ஷ்மிகளின் அழகான உருவங்களும்,  அதன் பின்பக்கம் சுந்தர விநாயகர் சன்னதியும் இருக்கு. அவரையும் வணங்குவோம். இனி கதைக்கு வருவோம்.


வியாசர் ஸ்ரீமத் பாகவதத்தை மனித குலத்திற்கு அளித்ததைத் தொடர்ந்து சுகப்பிரம்ம ரிஷி, குருவைப் பெருமைப் படுத்தும் விதமாக, ஆடிப்  பௌர்ணமி அன்று குருவை வழிபடும் ஞான மரபை தொடங்கி வைத்தார். ஆஷாட பூர்ணிமா, குருப்பூர்ணிமா, வியாசபூஜை  என்றெல்லாம் பாரதம் நெடுக குரு வணக்க நாளாக இன்றும் இது பின்பற்றப்படுகிறது. இத்தனை மகத்துவம் மிக்க மகான் வியாசர், நைமிச்சாரண்ய முனிவர்களுடைய ஜாதுல்யா யாகத்தை நடத்தி வைக்கும் பொருட்டும் பானுபுரம் வருகிறார், இந்தத் தலத்தில் உறையும் ஈசனின் அருள் பிரவாகத்தில் நனைந்து இங்கேயே ஆசிரமம் அமைத்து, வேதத்தைக் காக்கும் பணிக்காக மிக அற்புதமான சீடர்களை உருவாக்குகிறார். வியாசர் இந்த ஊரில் வேதப் பாசறை அமைத்துச் செயல்பட்டதால், இப்பகுதி வியாசர்பாடியானது என்கிறது புராணம்.

சிவன் சன்னதிக்கு பின்புற பிரகாரத்தில் வேதவியாசருக்கு சிறிய சன்னதி இருக்கிறது. புலித்தோல் மீது, பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் இவரது சிலை வடிக்கப்பட்டிருக்கிறது. இவர் வலது கையில் சின்முத்திரை காட்டி, இடது கையில் சுவடி வைத்திருக்கிறார். பவுர்ணமியன்று மாலையில் இவருக்கு வில்வமாலை அணிவித்து, விசேஷ பூஜை செய்கின்றனர். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு, இவரிடம் வேண்டிக்கொண்டால், அவர்களது கல்வி சிறக்கும்.  தை மாதத்தில் ரதசப்தமியன்று, வியாசர் இங்கு சிவனைப் பூஜிப்பதாக ஐதீகம். அவரது அருகில் ராமலிங்கருக்கும் சிறிய சன்னதி இருக்கு.

வியாசர் சன்னதிக்கு அருகில், ஸ்ரீதேவி, பூதேவியோடு "முனைகாத்த பெருமாள்' சன்னதி இருக்கிறது. வேதவியாசர் மகாபாரதக் கதையைச் சொன்னபோது, விநாயகர் தனது தந்தத்தை உடைத்து எழுதினார். அப்போது, தந்தத்தின் கூரிய முனை, மழுங்கி விடாமல் இந்த பெருமாள் காத்தருளினாராம். எனவே இவர், "முனை காத்த பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார். புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசியில் இந்தப் பெருமாளை வணங்கினால் அறிவை கூர்மையாக்கி அருள்புரிவார் என்ற ஐதீகமும் உண்டு.

இவருக்கு அருகே நாகர் மற்றும் தல விருட்ஷம் வன்னிமரம் இருக்கிறது வன்னி மரத்திற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. எவ்வளவுதான் உயரமாக வளர்ந்தாலும், அதன் இலைகளும், கிளைகளும் தலைசாய்ந்த நிலையில் குடைபோல அடக்கமாக இருக்குமாம். அந்த வன்னிமரத்தின் அடியில் நாகர் சன்னதி இருக்கிறது. நாக தோஷம் உள்ளவர்கள், இம்மரத்திற்கு கீழேயுள்ள நாகருக்கு மஞ்சள்பொடி, பால் அபிஷேகம் செய்தும், பெண்கள் சுமங்கலிகளாக இருக்க தாலி கட்டியும் வேண்டிக்கொள்ளும் ஐதீகம் இங்கும் இருக்கு.

வன்னியை அடுத்து வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் வீற்றிருக்கும் சன்னதியும், மூலவர் விமானத்தில் நனதவிநாயகர்,  தென்முக கடவுள் தட்சிணாமூர்த்தி, அவருக்கு மேல் அடுக்கில் வீணை தஷிணாமூர்த்தி மிகவும் விசஷமாக காட்சி தருகிறார். அதனை அடுத்து மாஹவிஷ்ணு, அவரை அடுத்து பிரம்மா ஆகியோரும் மூலவர் கோபுரத்தை அலங்கரிக்கின்றனர். பக்கத்தில் சண்டிகேஸ்வரர் சன்னதியும் இருக்கு. தாயார் மரகதாம்பாள் சன்னதி கோபுரத்தில்  வைஷ்ணவி பின்பக்கம் பிரம்மமுகி, அதனை அடுத்து கௌமாரி, அதனை அடுத்து மகேஸ்வரி ஆகியோரும் அலங்கரிகின்றனர்.நீண்ட நாட்களாக திருமணமாகாத பெண்கள் இங்குள்ள அம்பாளிடம் வேண்டிக்கொள்ள அப்பாக்கியம் கிடைப்பதாக நம்பிக்கையும் உண்டு.

வடக்கிழக்கு மூலையில் காலபைரவர் சன்னதியும், அதன் பக்கத்தில் ஐயப்பன் சன்னதியும் இருக்கிறது . வியாச பகவான் பூஜித்த இந்த ஈசனை ஆடிப் பௌர்ணமியன்று தரிசிக்க, கலை, கல்வியில் சாதிக்கும் சக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இந்த ரவீஸ்வரரைப் பணிய, நிச்சயம் பணம் வரும். பதவி வரும். பணிவு வரும். எல்லாவற்றையும் தாண்டி எது உண்மையான ஆனந்தம் எனும் ஞானத் தெளிவும் வரும்.



அதே வரிசையில் நவக்கிரக சன்னதி உள்ள.து இந்தத் திருகோவிலின் சிறப்பு என்னவெனில், பழைய காலத்தில் கட்டிடங்கள் ஏதும் இல்லாமல் வயல் வெளிகளாக இருந்த சமயத்தில் காலையும் நண்பகலும் தன்னுடைய கதிர்களால் வழிபடும் சூரியபகவான் மாலை வேளையும் மூலவர் கோபுரத்தின் பின்பக்கம் இருக்கும் ஒரு துளை வழியாக மூலவர் சன்னதியில் வைக்கப்பட்டு இருக்கும் கண்ணாடி பிம்பத்தில் பட்டு மூலவர் மேலே விழுமாம். இபொழுது உயரமான கட்டிடங்கள் காரணமாக அது இல்லை என இந்த கோவிலின் சிவாச்சாரியார் வர்த்தத்தோடுத் தெரிவித்தார்.

கோயிலுக்கு நேரே வெளியில், சூரியபகவான் உருவாக்கிய சூரிய தீர்த்தம் இருக்கிறது. அறியாமல் செய்த பாவம் நீங்க சிவனிடமும், அறிவுக்கூர் மையான குழந்தைகள் பிறக்க முனை காத்த பெருமாள், கல்வி, கலைகளில் சிறந்து திகழ வேதவியாசரிடமும் வேண்டிக்கொள்கிறார்கள் இந்த பகுதியில் உள்ளவர்கள்.

 இந்தத் திருகோவில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். மேலும் கூடுதல் விவரங்கள் தெரிஞ்சுக்கணும்னா திருக்கோவில் சிவாச்சாரியார் சிவகுமார் என்ற பெரியவரை 72992 48583 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் . மீண்டும் அடுத்தவாரம் வேறு ஒரு கோவிலில் புண்ணியம் தேடி பயணத்தில் சந்திக்கலாம்.

 நன்றி! வணக்கம்!

18 comments:

  1. 'உத்தர்' 'அயனம்' 'தட்சண்' விளக்கம் அருமை...

    அருமையான படங்களுடன் அருள்மிகு ரவீஸ்வரர் திருக்கோயிலின் தகவல்கள் + விளக்கங்களுக்கு நன்றி சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா!

      Delete
  2. கோவிலை அழகாக சுற்றி காட்டியதற்கு நன்றி. ஊர் பெயரின் காரணம் புதிய தகவல் .

    ReplyDelete
    Replies
    1. புதியதொரு தகவலை தெரிந்துக் கொண்டதற்கு நன்றி சகோ!

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. இரண்டு முறை ஒரே கருத்து பதிவாகி விட்டது. அதனால் மற்றொன்றை அழிக்க வேண்டியதாகி விட்டது .

      Delete
    2. அப்படியா! பரவாயில்ல சகோ!

      Delete
  4. சென்னையில் தான் இருக்கோம் ஆனா இதெல்லாம் தெரியவில்லை தகவலுக்கு நன்றிங்க அண்ணி .

    ReplyDelete
    Replies
    1. உள்ளூர் சாமிக்கு மதிப்பில்லேன்னு ஒரு பழமொழியே இருக்கு சசி!

      Delete
  5. விளக்கங்கள் அருமை அதிவிட போட்டோக்கள் மிகவும் அருமை நேரில் பார்த்தது போல் அழகாக இருக்கிறது .....உங்களால் வரம்தோறும் பல கோவில்களை பற்றி தெரிந்துகொள்கிறோம் நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க அமிர்தா!

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. தலபுராணமும் படங்களும் நன்று. பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  8. ரவீஸ்வரர் ஆலய தலபுராணமும் படங்களும் அருமை! சென்னை வரும்போது நம்ம ஊரு கோவிலுக்கும் வாங்க! பிரம்மன் வழிபட்ட கணபதியை தரிசியுங்கள்! நன்றி!

    ReplyDelete
  9. வணக்கம் நண்பரே!! நான் பெரம்பூர், சென்னையில் வசிக்கின்றேன். எனது வீட்டின் அருகில் இருக்கும் ஒரு ஆலயத்தின் வரலாற்றை பற்றி அறிய வேண்டும். (லஷ்மி அம்மன் கோவில்) அக்கோவிலை பற்றிய வரலாற்று சிறப்புகள், அறிய வேண்டும். இங்கு உள்ளோர்க்கு அத்தகைய தகவல்கள் தெரியவில்லை, தயவு கூர்ந்து அத்தகைய தகவல்கள் எனக்கு அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கோவில் அமைவிடம் சொல்லுங்க சகோ. தெரிஞ்சவங்ககிட்ட கேட்டு சொல்றேன்

      Delete
  10. கோவில் கட்டப்பட்ட காலம் குறித்த தகவல் உண்டா?

    ReplyDelete