Tuesday, March 19, 2019

வீட்டிலேயே அரைக்கலாம் மிளகாய் தூள் - கிச்சன் கார்னர்

பாட்டியெல்லாம் கம்பு, கேழ்வரகுலாம் வீட்டிலேயே சுத்தம் செய்து அரைத்து மாவாக்கி,  நெல்லை குத்தி  அரிசியாக்கி, மிளகாய், மசாலாக்களை அம்மியில் அரைத்து சமையல் செய்தவரை உணவு ருசியாகவும், மனிதர்கள் ஆரோக்கியமாகவும் இருந்தனர். நெல்லை உள்ளூர் ரைஸ் மில்லில் கொடுத்து அரிசியாக்கி,  வாங்கி, கம்பு, கேழ்வரகு, மிளகாய்லாம் மெஷின்ல அரைச்சு,  மசாலாக்களை அம்மியில் அரைச்சவரைக்கும் உணவு ருசியாகவும், உடல் ஆரோக்கியமாவும் இருந்துச்சு..

வெள்ளை வெளேர்ன்னு பாலிஷ் ஆக்கப்பட்ட அரிசி, பாக்கெட்ல அடைக்கப்பட்ட கோதுமை மாவு, மிளகாய் தூள், ரெடிமேட் மசாலாக்கள் வாங்கி மிக்சி, கிரைண்டர்ன்னு நம்மலாம் மாறினப்பின் உணவு ருசியும் போச்சு, ஆரோக்கியமும் போய்க்கிட்டே இருக்கு.  இனிவரும் காலத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், ஹோட்டல் சாப்பாட்டையும் சாப்பிடப்போகும் வரும் தலையினரை நினைச்சால்தான் மனசு வலிக்குது. கொஞ்சம் மெனக்கெடலும், குடும்பத்தின்மீதான அக்கறையும் போதும். நாம் ஆரோக்கியமாய் வாழ! ஆனா, எல்லாமே ஈசியா கிடைக்கனும்ன்ற மனநிலை சாப்பாட்டுலயும் இருக்குறது வேதனைக்குரிய விசயம்.

பாக்கெட்ல அடைத்து விற்கப்படும் எல்லாத்துலயும் கலப்படம். இன்னிக்கு பார்க்கப்போற குழம்பு மிளகாய் தூளில் மரத்தூள், செங்கல் தூள் கலக்குறாங்க. தனி மிளகாய் தூளில் கலர் பொடி சேர்க்கிறாங்க. வீட்டில் அரைக்கும் மிளகாய் தூளை தண்ணியில் கரைச்சா கரைஞ்சுடும். வெளியில் வாங்கின மிளகாய் தூளை கரைக்கும்போது  மேல எதாவது மிதந்தால் அது மரத்தூள் சேர்க்கப்பட்டதுன்னு தெரிஞ்சுக்கலாம். அடியில் நின்னால் செங்கல் தூள், தண்ணீர் சிவப்பு கலரா மாறிட்டா கலர்பொடி கலந்திருக்குன்னு புரிஞ்சுக்கலாம். 

நம்மூரில்  மிளகாய் மட்டுமே அரைச்சு கறிக்குழம்பு, குருமா மாதிரியானவற்றில் சேர்க்க தனி மிளகாய் தூளையும், கூட்டு, குழம்பு, காரக்குழம்புல சேர்க்க குழம்பு மிளகாய் தூள்ன்னு ரெண்டு வகையா அரைச்சு வைப்பாங்க. பொதுவா ரெண்டுத்தையுமே  மிளகாய் தூள்ன்னுதான் சொல்வாங்க. சிலர் மட்டுமே குழம்பு தூளை குழம்பு மிளகாய் தூள்ன்னு சொல்வாங்க.  இனி, மிளகாய் தூள் அரைக்க தேவையான பொருட்களை பார்க்கலாம்..
இந்தமுறை மிளகாய் தூள் அரைக்க மிளகாய் காய வச்சிருக்கும்போது வெளியில் போய்ட்டேன். மாலையில் வீடு திரும்ப லேட்டானதால் பிள்ளைகளுக்கு போன் பண்ணி  மிளகாய் வாறி வச்சுடும்மான்னு சொன்னேன். வீட்டுக்கு வந்தால் எனக்கு செம திட்டு. மிளகாய் வாறும்போது தும்மல் வந்துச்சாம், கை, மூக்கெல்லாம் எரியுது.  கடையில் பாக்கெட் பண்ணி வைக்கும்போது ஏன் இப்படி மெனக்கெடுறேன்னு அலுத்துக்கிட்டா. அப்பதான் யோசனை வந்துச்சு பெரும்பான்மையான இனிவரும் தலைமுறை பிள்ளைக மனநிலை அப்படிதானே இருக்கும். அதனால், செல்பி, பேஸ்புக சமூக வலைத்தளம் வாயிலா  வாயிலா எதையெதையோ  பதிஞ்சு வைக்கிறோம். வாழ்க்கைக்கும், ஆரோக்கியத்துக்கும் தேவையான சின்ன சின்ன  விசயங்களையும் இனி பதிஞ்சு வைக்கனும். ஒருவேளை, என் பிள்ளைகள் குடும்ப வாழ்க்கையில் நுழையும்போது இதை சொல்லித்தர நான் இல்லாம போயிட்டா...  அன்றாட வாழ்க்கைக்கு தேவையான சின்ன சின்ன விசயங்களை பதிஞ்சு வைக்கிறேன்.... 

தேவையான பொருட்கள்...
குண்டு மிளகாய் - 1கிலோ
தனியா - 1 கிலோ
கொம்பு மஞ்சள் - 100 கிராம்
பெருங்காயம் - 1 கட்டி
வெந்தயம் - 100கிராம்
சுக்கு -100கிராம்
துவரம்பருப்பு - 100கிராம்
கடலைப்பருப்பு - 100கிராம்
உ.பருப்பு - 100கிராம்
மிளகு - 25கிராம்
சீரகம் - 100 கிராம்
காய்ந்த கறிவேப்பிலை.



பருப்புகள் தவிர்த்து மிளகாய், தனியா, வெந்தயம் சுக்கு, மஞ்சள், பெருங்காயம்லாம் நல்லா வெயிலில் காய வச்சுக்கனும். மிளகாயை கையால் நசுக்கினால் அப்பளம் மாதிரி நொறுங்கனும். அதான் பதம்.
கட்டி பெருங்காயத்தினை கிள்ளி காய வைங்க.  என் மாமியார் வீட்டில் எண்ணெயில் வறுத்து சேர்ப்பாங்க
காய்ந்த கறிவேப்பிலையை வீணாக்காம சேமிச்சு வச்சு மிளகாய் தூள் அரைக்கும்போது சேர்த்துக்கலாம்,. இல்லன்னா புதுசா வாங்கி நிழல் உலர்த்தலா உலர்த்தியும் சேர்க்கலாம்.
பருப்பு வகைகளை பொன்னிறமா வறுத்துக்கனும்.. மிளகு, சீரகம் வறுத்துக்கனும். சிலர் வெயிலில் மிளகாயோடு சேர்த்து காய வைப்பாங்க. 

எல்லாத்தையும் கலந்து மெஷின்ல கொடுத்து அரைச்சுக்கனும். அரைச்சு வரும் மிளகாய் தூள் சூடா இருக்கும். அதை அங்க இருக்கும் மேடையிலோ அல்லது வீட்டில் வந்து பேப்பரிலோ கொட்டி நல்லா ஆற வச்சு பெரிய டப்பாவில் கொட்டி வச்சுக்கனும். தினத்துக்கு பயன்படுத்த சின்னதா ஒரு டப்பாவில் எடுத்து தனியா வச்சுக்கிடனும்.   மொத்த மிளகாய் தூள் டப்பாவை தினத்துக்கும் திறந்து மூடினால் வாசம் போய்டும். சமைக்கும் நம்ம கை ஈரம் பட்டால்  மிளகாய் தூள் கெட்டி தட்டும். அதனால் பெரிய டப்பாவில் சேமிச்சுக்கனும்...

டிப்ஸ்கள்...
1. மிளகாய் தூள் அரைக்க எப்பவுமே குண்டு மிளகாயை வாங்குவதே நல்லது. அதுதான் காரமா இருக்கும்.
2. சிலர் வீட்டில் மிளகாய் காம்பினை எடுத்துட்டு அரைப்பாங்க..
3. பருப்பு வகைகளும், மஞ்சளும் வீட்டுக்கு வீடு மாறுபடும். 
4. மிளகாய் தூள் சன்னமா அரைக்கலைன்னா பால் பொங்கி வர்றது மாதிரி குழம்பு பொங்கும். அதை வச்சு தூள் தரத்தினை தெரிஞ்சுக்கலாம்.
5. ஒரு கிலோ மிளகாய் வாங்கி அரைச்சு சேமிச்சுக்கிட்டா 5 பேர் கொண்ட குடும்பத்துக்கு நாலு மாசம் வரும்.
6. மிளகாய் தூள் அரைக்கும்போதே  தனித்தனியா தனியா(கொ.மல்லி விதை), மிளகாய் ஆகிய இரண்டையும் 1/4 கிலோ  காய வச்சு அரைச்சு வச்சுக்கிட்டா  பாக்கெட்ல வர்றதை வாங்க வேணாம். ‘
இதான் ஒரே கல்லுல மூணு மாங்கா அடிக்குறது..

அடுத்த வாரம் வடகம் செய்முறையோடு வரேன்..

நன்றியுடன்,
ராஜி

12 comments:

  1. இதுநாள் வரைக்கும் வெளியில் வாங்கியதில்லை... அனைத்தையும் உங்க அண்ணி வீட்டிலேயே செய்து விடுவார்கள்...

    பிள்ளைங்க மனசுல பதிஞ்சு வைக்கிறது தான் முக்கியம்...

    ReplyDelete
    Replies
    1. வெளியில் வாங்காதவரை உடலுக்கு நல்லது...

      நம் பிள்ளைகளுக்கு இது புரியாது....

      Delete
  2. நாங்களும் வீட்டிலேயே தான்... வெளியே வாங்குவது இல்லை.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா!? வாழ்த்துகள்

      Delete
  3. நாங்களும் வீட்டிலேயேதான் அரைத்துக் கொள்கிறோம். சீரகம் சேர்க்கமாட்டோம். மிளகாய் மாதிரி தனியா ரெண்டு மடங்கு. மிளகு சற்றுகூடுதல் அளவு. மஞ்சளும். உளுத்தம்பருப்பு சேர்க்க மாட்டோம். பெருங்காயம் இதில் சேர்க்க மாட்டோம். அவ்வப்போது சமையலில்.

    ReplyDelete
    Replies
    1. வீட்டுக்கு வீடு அளவு மாறுபடும். தனியா இருமடங்கு சேர்த்தால் காரம் குறைச்சலா இருக்காதா?!

      Delete
  4. நானும் வீட்டிலேயேதான் குழம்புத் தூள் ரசத்தூள் எல்லா பொடியுமே கடையில் வாங்குவதில்லை. எல்லாமே வீட்டில்தான்.

    மிளகாய் கொஞ்சம் கம்மியா போடுவதுண்டு...அதாவது தனியாவின் பாதி அளவு...பெருங்காயம் இதுல சேர்க்கறதில்லை...சாம்பார் செய்யும் போது சேர்ப்பது...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மிளகாய் பாதியளவு சேர்க்கும்போது காரம் குறைச்சலாகிடாதா?!

      Delete
  5. அட... மிளகாய்த்தூள் என்றதும், இதுக்கு எதுக்கு ரெசிப்பி... மிளகாயைக் காய வைத்து அரைக்கவேண்டியதுதானே என்று நினைத்தேன்.

    இது குழம்புப் பொடி அல்லவா?

    நடத்துங்க நடத்துங்க

    ReplyDelete
  6. Hi Mam,
    மிளகாய் தூள் இல்லாமல் குழம்பு
    வை‌க்கலாமா? மிளகாய் தூள் வரலாறு please...

    ReplyDelete