Tuesday, January 21, 2014

இட்லிப்பொடி - கிச்சன் கார்னர்

ஆளுக்கு இத்தனைன்னு கணக்கு பண்ணிதான் இட்லி ஊத்துவேன். எப்பவாவது ஒரு சமயம் இட்லி மீந்துட்டா என்ன பண்ணுறதுன்னு கவலைப்பட வேணாம். ஸ்கூல்ல இருந்து பிள்ளைங்க வந்ததும், காலைல மீந்துப் போன இட்லியை சூடு பண்ணி கொஞ்சம் இட்லிப்பொடியும், நல்லெண்ணெயும் கொடுத்துட்டா போதும். இட்லி வச்சிருக்கும் பாத்திரம் நிமிசத்துல காணாம போய்டும். அதனால, எப்பவும் வீட்டுல இட்லிப்பொடி இருக்கும். 

தேவையானப் பொருட்கள்:
உளுத்தம்பருப்பு -   கப்
கடலைப்பருப்பு - 1/2கப்
வேர்கடலை - ஒரு கைப்பிடி
கொள்ளு - ஒரு கைப்பிடி
உடைச்ச கடலை - ஒரு கைப்பிடி
கருப்பு எள்ளு - ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய் - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - கைப்பிடி
உப்பு தேவைக்கேற்ப

உடைச்ச கடலை, உப்பு தவிர்த்து மற்றப் பொருட்களை வெறும் வாணலியில் தனித்தனியா சிவக்க வறுத்து எடுத்துக்கோங்க. மிளகாயை வறுக்கும்போது நெடி வராம இருக்க கொஞ்சம் கல் உப்பு சேர்த்துக்கிட்டா நெடி வராது. அடுப்பை ஆஃப் பண்ணிட்டு வாணலி சூட்டுலயே கறிவேப்பிலையை போட்டு வச்சா ஈரம் போய் மொறுமொறுப்பாகிடும்.

வறுத்தப் பொருட்கள் சூடு ஆறினதும், உப்பு, உடைச்ச கடலைச் சேர்த்து மிக்சில நைசா அரைச்சுக்கோங்க. காத்துப் புகாத டப்பாவுல எடுத்து வச்சுக்கிட்டா ரெண்டு மாசம் வரை கெடாது.


தேவைப்படும்போது ஒரு ஸ்பூன் இட்லிப்பொடியோடு கொஞ்சம் நல்ல எண்ணெய் இல்லாட்டி நெய் சேர்த்து சாப்பிட நல்லா இருக்கும்.

சூடான சாதம், இட்லி, தோசை, உப்புமாக்கு தொட்டுக்கிட்டு சாப்பிட நல்லா இருக்கும். பிடிக்காத சாம்பார் வச்சா சாதத்துல பொடிப் போட்டு நல்லெண்ணெய் ஊத்தி சாப்பிடுவாங்க என் பசங்க. என் அப்பா சாதத்துல பொடிப் போட்டு பிசைஞ்சு ஆளுக்கொரு உருண்டை கொடுப்பார். அதோட ருசி எந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் சாப்பாட்டுல கூட ருசித்ததில்ல!!

அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான ரெசிபியோடு சந்திக்குறேன். 

24 comments:

  1. /// என் அப்பா சாதத்துல பொடிப் போட்டு பிசைஞ்சு ஆளுக்கொரு உருண்டை கொடுப்பார். அதோட ருசி எந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் சாப்பாட்டுல கூட ருசித்ததில்ல!!! ///

    அன்பும் கலந்துள்ளது அல்லவா...?

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான் அண்ணா!

      Delete
  2. வாழ்வும் காலம் வரை அப்பாவின் நினைவு இருப்பது மகள்களின் மனதில் தான் என்பது உண்மை தானே...?

    தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?

    அடடா...! எனது வரும் பதிவின் சில வரிகளை சொல்லி விட்டேனே...! ஹா... ஹா...

    வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. பதிவைப் படிக்க ஆவலாய் உள்ளேன். வாழ்த்துகளுக்கு நன்றி அண்ணா!

      Delete
  3. எனக்கும் இட்லி பொடின்னா ரொம்ப பிடிக்கும்..ஆனா அதை சாதத்தில் மிக்ஸ் பண்ணி சாப்பிட்டதில்ல..

    ReplyDelete
    Replies
    1. ஒரு முறை சாப்பிட்டு பாரு ஆவி!

      Delete
  4. எங்க வீட்டில் எப்போவுமே ஸ்டாக் இருக்கும்... ரோஷ்ணிக்கு தோசை மிளகாய்ப் பொடி தான் வேண்டும்.. சட்னி, சாம்பாரெல்லாம் சாப்பிட மாட்டாள்... அவளால் இப்போ நானும் பொடி தான்...:)) யாராவது வந்தா தான் சட்னி....:)

    உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய், எள்ளு, பெருங்காயம், உப்பு , கறிவேப்பிலை இவை தான் எங்க வீட்டு பொடிக்கு போடும் பொருட்கள்... கொள்ளு, வேர்க்கடலை, பொட்டுகடலை சேர்த்து செய்து பார்க்கிறேன்..

    இட்லி உப்புமா செய்ய மாட்டீங்களா? இந்த பொடியை போட்டு இட்லியை உதிர்த்து, தாளித்து செய்து பாருங்க...

    எனக்கு இந்த பொடியுடன் பச்சை வெங்காயத்தை அரிந்து சேர்த்து பிசறி தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட பிடிக்கும்..

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! அருமையான இரண்டு குறிப்புகளை சொல்லி இருக்கீங்க. செஞ்சுப் பார்த்துடுவோம்.

      Delete
  5. இட்லி பொடிக்கு தில்லியில் என்ன பெயர் தெரியுமா!

    Gun Powder! :)))

    ReplyDelete
    Replies
    1. அப்படியா!? அந்த பேர் எதனால வந்தது!?

      Delete
  6. இங்கும் நாங்கள் செய்து வைத்திருக்கிறோம்... ஆனால் சாதத்தில் பிசைந்து சாப்பிட்டதில்லை... அப்பாவின் அன்பு விலைமதிப்பில்லாதது.அக்கா...

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான் சகோ! அதிலயும் என் அப்பா ரொம்ப ஸ்பெஷல்

      Delete
  7. எங்கள் வீட்டில் அநேக நேரங்களில் காலையில் இட்லி தோசைதான் உணவு அதற்கு சட்னி அல்லது பொடிதான் உபயோகிப்போம். பொடி நீங்க சொன்ன முறைதான் ஆனால் அதில் நாங்கள் சில பூண்டுகள் போட்டு அரைத்து வைத்து கொள்வோம்.பூண்டு சேர்ப்பதால் மணம் மிக நன்றாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. பூண்டு சேர்த்தால் ஒரு வாரம் கூட தாங்காது. சீக்கிரம் காலிப் பண்ணிடனுமே சகோ! அதான் சேர்ப்பதில்லை.

      Delete
  8. இட்லி உப்புமா செய்து சாப்ப்பிட்டால் மிக அருமையாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இட்லி உப்புமா ரொம்ப பிடிக்குமாக்கும்.

      Delete
    2. எனக்கும் பிடிக்கும் ச்கோ! ஆனா, அதை செய்யனுமே! அதான் இட்லிப்பொடி வச்சு கொடுத்துடுவேன்

      Delete
  9. சகோ உங்க வீட்டுல இட்லி மிஞ்சாம இருக்க ஒரு வழி இட்லியை பூபோல பண்ணி தரணும் அதவிட்டு விட்டு கல்லுப் போல பண்ணினால் மீஞ்சாமல் என்ன செய்யும்

    ReplyDelete
    Replies
    1. கல்லுப்போலலாம் செய்யலை. என் பையனை திட்டிட்டா என் அம்மா வீட்டில் போய் சாப்பிட்டு வந்துடுவான். உடம்பு சரியில்லேன்னா உங்க மாப்ள சாப்பிட மாட்டார் அப்படியும் இட்லி மீறும்.

      Delete
  10. சகோ, அந்த பொடியில காய்ந்த மிளகாய் தேவைக்கேற்பன்னு போட்டிருக்கீங்க. நல்ல காரமா,சுள்ளுன்னு இருக்க எத்தனை மிளகாய் போடணும்னு சொல்லவேயில்லை. ஏன்னா இட்லிப்பொடின்னாலே காரமா இருந்தாத்தானே ரொம்ப நல்லா இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. காரம் ஆளுக்காள் வேற்படுமில்ல!?

      Delete
  11. இனிமேல் சாப்பிட்டிற்குத் தொட்டு சாப்பிடுகிறேன்..

    ReplyDelete
    Replies
    1. சாப்பிட்டு பாருங்க நல்லா இருக்கும். சாதம் சூடாய் இருக்கனும், கொஜ்சம் உப்பும் சேர்த்துக்கோங்க.

      Delete